பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் இன்சமாம் உல் ஹக் மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து சச்சின் டெண்டுல்கர் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திங்கள் இரவு இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் லெஜண்டுக்கு விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில், “இன்சமாம் நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
நீங்கள் எப்போதும் அமைதியுடன் கூடிய போட்டி மனப்பான்மை உடையவர், விளையாட்டு மைதானத்தில் ஒரு போராளி, எனவே இந்தச் சூழ்நிலையிலிருந்தும் நீங்கள் வலுவாக மீண்டு வருவீர்கள். விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக இன்சமாம் நெஞ்சுவலியால் அவதியுற்று வந்தார். முதல் மருத்துவப் பரிசோதனைகள் அவருக்கு ஒன்றும் இல்லை என்று காட்டினாலும் பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனைகளில் அவருக்கு சிறு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
உடனடியாக இன்சமாம் லாகூர் மருத்துவமனையில் சேர்ந்து ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்து கொண்டு நலமடைந்தார்.
அவர் உடல் நிலை சீராக இருந்தாலும் அவர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்சமாம் பாகிஸ்தானின் மிகப்பெரிய பேட்டர்.
1992 உலகக்கோப்பை என்றாலே இன்சமாம் உல் ஹக் தான், அரையிறுதி, இறுதியில் அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி பாகிஸ்தான் கோப்பையை வெல்ல முக்கிய பங்களிப்பாளராகத் திகழ்ந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் அதிக ரன் எடுத்த வீரர் இன்சமாம் தான் 375 போட்டிகளில் 11,701 ரன்கள் எடுத்துள்ளார். அவர் காலத்தில் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.
Post a Comment