கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்து 10 நாள்களின் பின் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிறந்த குழந்தைக்கு கோவிட்-19 தொற்று உள்ள நிலையில் பிள்ளை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.
கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய சண்முகராசா பிரியதர்ஷினி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 15 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக கர்ப்பிணிப் பெண் சேர்க்கப்பட்டார். அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதனால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த பத்து நாள்களுக்கு முன் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கும் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதனால் தாய் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கடந்த 26ஆம் திகதி மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி தாயார் நேற்றிரவு உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டதுடன் பெண்ணின் சடலத்தை சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
Post a Comment