இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசம். வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம். பராதீனப்படுத்தாத சுயநிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பவை ஏற்றுக் கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்தபட்ச சமஷ்டி அதிகார கட்டமைப்பு ஒன்றின் கீழ் ஏற்படுத்தப்படும் அதிகார பகிர்வே தேசிய இனப்பிரச்சனைக்கான நிலையான தீர்வாகும் என தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
சுகயீனம் காரணமாக விக்னேஸ்வரன் இக்கூட்டத்தில் பங்கு பற்ற முடியவில்லை. அவர் சார்பாக இந்த ஆவணம் பேராசிரியர் சிவநாதனால் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமஷ்டி கட்டமைப்பின் கீழ் இத்தகைய ஒரு நிலையான தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா எல்லாவிதமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அதே வேளை, குறுகிய அரசியல் இலாபம், தூர நோக்கற்ற சிந்தனை மற்றும் கடும் பௌத்த இனவாத சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை கவனத்தில் கொண்டும், வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கும், அரசியல் அமைப்பில் ஏற்கனவே இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை அதன் ஆரம்ப நிலையில் இருந்தவாறு முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா காலதாமதம் எதுவும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் கலாசார அபிலாஷகளை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் தார்மீக ரீதியான கடமையினையும் பொறுப்பினையும் நாம் வலியுறுத்துவதுடன் அதன் அடிப்படையில் உடனடியாக தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் பேசும் மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தற்போதைய நிலைமையில் மலையக மக்களும் முஸ்லீம் மக்களும் வாழும் இடங்களில் மாகாணசபைகளை உடனே ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றுள்ளது
Post a Comment