சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை - ‘நாவலர் ஆண்டு’ என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு - பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் தலைமையில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்தப் பிரகடனத்திற்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் மு. பத்மவாசனினால் தத்ரூபமாக வரையப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இரு திருவுருவப் படைப்புகள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவால் வெளியிட்டு வைக்கப்பட்டன.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் திருவுருவ வர்ணப் படைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நல்லை ஆதீனக் குரு முதல்வர் வண. ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வண. அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள் ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.
மற்றைய படைப்பு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் .சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் வே.கந்தசாமி ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.
மேற்படி பிரகடன நிகழ்வில், நல்லை ஆதீன முதல்வர் வண. ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வண. அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் வண. கலாநிதி இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன், அங்கஜன் இராமநாதன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாம கேஸ்வரன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்களான எஸ்.தில்லை நடராஜா மற்றும் திருமதி சாந்தி நாவுக்கரசன், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் வே.கந்த சாமி, சுந்தரலிங்கம், சுப்பிரமணியன், விக்னேஸ்வரன், ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment