55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி - Yarl Voice 55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி - Yarl Voice

55 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி



இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் வலியுறுத்திய நிலையில், அவர் தமிழக மீண்வர்கள் 55 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 43 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவர்களை டிசம்பர் 18ம் தேதி கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 6 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை கடற்படையினாரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் காங்கேசன்துறை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம், மண்டபம் பகுதியில் இருந்து 2 படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று (டிசம்பர் 19) கைது செய்தது. இலங்கை கடற்படை ஏற்கனவே 43 மீனவர்களை கைது செய்திருந்த நிலையில் இந்த 12 மீனவர்களையும் சேர்த்து கைதான மீனவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு உடனடியாக சிறைபிடிகப்பட்ட 55 மீனவர்களையும் மீட்டுத்தர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் டிசம்பர் 31ம் தேதி வரை இலங்கை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, இலங்கை கடற்படையினரால கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேர்களையும் அவர்களின் 8 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முதலமைச்சரின் கோரிக்கைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post