மீனவர் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் ஏமாற்று நாடகம்! கஜேந்திரன் எம்பி குற்றச்சாட்டு - Yarl Voice மீனவர் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் ஏமாற்று நாடகம்! கஜேந்திரன் எம்பி குற்றச்சாட்டு - Yarl Voice

மீனவர் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் ஏமாற்று நாடகம்! கஜேந்திரன் எம்பி குற்றச்சாட்டுஅழிவு வேலைகளுக்கு துணைபோன கடற்றொழில் அமைச்சர் மக்களின் இக்கட்டான நிலையை சாதகமாக பயன்படுத்தி தானே வந்து பிரச்சனையை தீர்ப்பது போல சித்தரிப்பதை ஏற்க முடியாதென அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற கடற்றொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இடை நடுவில் வெளியேறியிருந்தனர்.

இந்த விடையம் தொடர்பில் இன்று மாலை யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவனில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பின்னர்  ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே செல்வராஜா கஜேந்திரன் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களாலும் தென்னிலங்கை மீனவர்களாலும் எமது பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

நாம் மீனவர்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம். அந்த வகையில் எங்களைப் பொறுத்தவரை மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய தார்மீக ரீதியான பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் மீனவர்கள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் நாம் கலந்து 
கொண்டிருந்தோம்

என்னை பொறுத்தவரையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு வந்த பொழுது நான் அங்கு இருக்க விரும்பவில்லை.

தமிழக மீனவர்கள் இங்கு மீன்களை பிடிப்பதற்காக வரக் கூடும். ஆனால் இலங்கை கடற்படை அவர்களை திட்டமிட்டு இங்கே மீன்களை பிடிக்க விடுகின்றார்கள். இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் துணை போகின்றார். 

கடந்த இரண்டு வருடங்களாக அவர் அமைச்சராக இருந்து மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாமல் இருக்கின்றார். அவர் மானமுள்ள தமிழனாக இருந்திருந்தால் இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்.

வடக்கின் கரையோர பகுதியில் தமிழர்கள் இருக்கக்கூடாது என இவர்கள் திட்டமிட்டு செயற்படுகின்றனர். தமிழர் அமைச்சராக இருந்தும் மயிலிட்டித் துறைமுகம் இன்று தமிழர்களின் கையில் இல்லை. பெரும்பான்மை இனத்தவர்களே அங்கு  இருந்து தொழில் செய்கின்றார்கள். கடலட்டை விடயத்தில் தென்னிலங்கை மீனவர்களால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது.

இவ்வாறான அழிவு வேலைகளுக்கும் துணைபோன அமைச்சர், மக்களின் இக்கட்டான நிலையை சாதகமாக பயன்படுத்தி தானே வந்து பிரச்சினையை தீர்ப்பதாக சித்தரிக்கின்றார். இவ்வாறான ஒரு துரதிஷ்டவசமான நிலைமை ஏற்படும் போது அதற்கு நாங்களும் துணை நிற்க முடியாது.

கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுக்கு எதிராகவும் நீரியல்வள திணைக்களத்திற்கு எதிராகவும் எப்போது மக்கள் போராடுகிறார்களோ அப்போதுதான் அரசாங்கம் மக்களுடைய பிரச்சினை பற்றி யோசிக்க தொடங்கும்.

அழிவுக்கு காரணமானவர்களே கூடி அழுகின்ற செயற்பாடாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேலையை நாம் பார்க்கிறோம். இது முழு ஏமாற்றுத்தனமான செயற்பாடு என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post