தமிழ்த்தேசிய அரசியலின் சரியான செல் திசைக்கு வலுவான சிவில் சமூகக் கட்டமைப்பு அவசியம்! ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு - Yarl Voice தமிழ்த்தேசிய அரசியலின் சரியான செல் திசைக்கு வலுவான சிவில் சமூகக் கட்டமைப்பு அவசியம்! ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு - Yarl Voice

தமிழ்த்தேசிய அரசியலின் சரியான செல் திசைக்கு வலுவான சிவில் சமூகக் கட்டமைப்பு அவசியம்! ஐங்கரநேசன் சுட்டிக்காட்டுஈழத்தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மீண்டும் ஒருமுறை சர்வதேசம் அவர்களைக் கையாள ஆரம்பித்திருக்கிறது. ஜனாதிபதியாக ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா இருந்தபோது இலங்கையின் கதவுகளை அமெரிக்காவுக்கு அகலத் திறந்துவிட்டிருந்தார். அப்போது, அமெரிக்கப் பிரசன்னத்தை இலங்கையில் தவிர்ப்பதற்காக இந்தியா ஈழத்தமிழர்களைக் கையாண்டிருந்தது. இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து இலங்கையைத்தன் வழிக்குக் கொண்டுவந்திருந்தது. இப்போது, ராஜபக்ச அரசாங்கம் இலங்கையைச் சீனாவுக்குத் திறந்துவிட்டுள்ள நிலையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையைப் பணியவைக்கும் முயற்சியில் தமிழ்க்கட்சிகளைக் கையாளத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், தமிழ்த்தேசிய அரசியலைச் சரியான செல்திசைக்கு நகர்த்துவதற்கு வலுவானதொரு சிவில் சமூகக் கட்டமைப்பை உருவாக்குவது அவசியமாகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் அரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.12.2021) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வரங்குக்குத் தலைமை வகித்து உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்தியாவும், அமெரிக்காவும், சீனாவும் தமிழ்க் கட்சிகளைக் கையாளத் தொடங்கியிருக்கும் சூழ்நிலையில் இக்கட்சிகள் இராஜதந்திர ரீதியாக இந்நாடுகளைக் கையாளுவதில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றன. தனித்தனிக் கட்சிகளாக ஏனைய கட்சிகளுக்கு எதுவும் தெரியாமலும், ஒரு கட்சிக்குள்ளேயே தனிநபர்களாக ஏனைய உறுப்பினர்களுக்குத் தெரியாமலும் இந்நாடுகளுடன் பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன. இவ்விடயங்களை மக்களுக்குப் பகிரங்கப்படுத்துவது இராஜதந்திரமாக ஆகாது என்று கூறிவருகின்றனர். மைத்திரி-ரணில் கூட்டை உருவாக்கியபோதும் தமிழ் மக்களின் நலன் தொடர்பாகப் பேசப்பட்டதென்றும் அதனை வெளிப்படையாகப் பேசுவது இராஜதந்திரம் அல்ல என்றும் கூறியிருந்தனர். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பைத் தனிக் கட்சிகளிடமும் தனிநபர்களிடமும் இவ்வாறு விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. 
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் கூறுவதற்காகப் பல தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டுச்சேர்ந்துள்ளன. இக்கட்சிகளின் கூட்டில் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இவை வடக்குக்கிழக்கு இணைப்பை ஒருபோதும் ஆதரித்தவை அல்ல. தொடர்ந்தும் எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக்கொண்டமை ஏற்கனவே பலவீனமாகவுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை மேலும் பலவீனப்படுத்துவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலோ என்றே எண்ணத்தோன்றுகிறது. அவ்வாறுதான் அது அமையவும் போகின்றது.
கூட்டுக்கட்சிக்குள்ளே கட்சிகளாகவும், கட்சிகளுக்குள்ளே தனித்தனித் தலைவர்களாகவும் பிரிந்து நிற்பது ஈழத்தமிழர்களைக் கையாளுவதற்குச் சர்வதேசத்துக்கு இலகுவானதாக இருக்கும். ஆனால், ஈழத்தமிழ் இனத்துக்கு மிகவும் ஆபத்தானது. இந்நிலையிலேயே தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சிகளை ஒருங்கிணைக்கவும், சர்வதேசங்களைத் தமிழ்த் தரப்புக் கையாளுவதற்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கும் சிவில் சமூகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இச்சிவில் சமூக அமைப்பு கடந்த காலத்தில் கட்டப்பட்ட சிவில் சமூக அமைப்புகளின் தோல்விகளைக் கருத்திற்கொண்டு அரசியல் கட்சிகளின் பினாமிகளாக அல்லாமலும் இவ்வமைப்பின் மூலம் கிடைக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தித் தனிப்பட்ட அரசியல் ஆதாயம் தேடுவனவாக அல்லாமலும் இருக்க வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post