அழகி படம் உருவாக இது தான் காரணம்... 20 வருடம் கழித்து மனம் திறந்த இயக்குனர் தங்கர் பச்சான்! - Yarl Voice அழகி படம் உருவாக இது தான் காரணம்... 20 வருடம் கழித்து மனம் திறந்த இயக்குனர் தங்கர் பச்சான்! - Yarl Voice

அழகி படம் உருவாக இது தான் காரணம்... 20 வருடம் கழித்து மனம் திறந்த இயக்குனர் தங்கர் பச்சான்!கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான அழகி திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகள் ஆகின்றன.

இது குறித்து இந்த அழகி படத்தின் இயக்குனர் தங்கர் பச்சான் முகநூலில் படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் "அழகியும் நானும் (2002-2022)- 1986 ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை கல்வெட்டு எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. 

என்னை உறங்க விடாமல் செய்திருந்த இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தார்கள்.
சண்முகமும் தனலட்சுமியும் என்னை செய்தது  போலவே அழகியைக் கண்டவர்களையும்  உறங்க விடாமல் செய்தார்கள்.

 ஒவ்வொருவரும் தனது தனலட்சுமியைத் தேடி அலைந்தது போல காலம் பிரித்து வைத்து  சேர்ந்து வாழ கிடைக்காமல் போன  தங்களின் சண்முகத்தையும் தேடினார்கள். இன்னும்கூட தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்தும் அழகி இன்றும்  உயிர்ப்புடன் வாழ்கிறாள்.

ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க முனைந்ததற்காக நானும் நண்பரும் தயாரிப்பாளருமான உதயகுமார் அவர்களும் விவரிக்க முடியாத மனவேதனைகளை சந்தித்தோம். நான் கடந்து வந்த வழிகளையும் அவமானங்களையும் மறக்க நினைத்தாலும் இயலவில்லை. 

திரைப்பட வணிகர்கள் இப்படத்தை புறக்கணித்து ஒதுக்கியதுபோல் மக்களும் செய்திருந்தால் நான் காணாமலேயே போயிருப்பேன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எத்தனையோ படங்கள் வெற்றிகளை குவிக்கின்றன.

 அவைகளெல்லாம் வணிக வெற்றியாகி மறக்கப்படுகின்றன. ஆனால் ஒரு சிலப்படங்கள் மட்டுமே காலங்கள் கடந்து மக்களின் மனங்களில் நிறைந்து என்றென்றும் வாழ்கின்றன.

என்னை சோர்ந்து விழாமல் தாங்கிப்பிடித்து வெற்றிப்படமாக்கி என்னாளும் நினைவில் வாழும் படைப்பாக மாற்றியவர்கள் மக்கள் மட்டுமே. இம்மண்ணிலிருந்து இம்மொழியிலிருந்து இம்மக்களிடமிருந்துதான் அழகி உருவானாள்.

 இம்மூன்றிலிருந்தும்தான் நானும் உருவாகினேன். அழகியை பாராட்டுபவர்கள் இம்மண்ணை பாராட்டுங்கள்! இம்மொழியை பாராட்டுங்கள்! இம்மக்களைப் பாராட்டுங்கள். இம்மூன்றிலிருந்தும் எப்பொழுது ஒருவன் விலகிச் செல்கிறானோ அதன் பின் அவனிடமிருந்து பிறக்கும் அத்தனையும் உயிரற்ற படைப்புகளாகவே இருக்கும்.

முற்றிலும் வணிகமயமாகிப்போன பெரு முதலாளித்துவ வலைக்குள் சிக்கிக்கொண்டு என் மண்ணோடும் மொழியோடும் மக்களோடும் கிடந்து உயிர்ப்புள்ள படைப்புகளைத் தருவதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்.

. வெறும் வணிக வெற்றியை மட்டுமே குறி வைத்து  ஓடிக்கொண்டிருக்கும் இத்திரையுலகத்தில் என்னைப்போன்ற சிலர் அவர்களுடன்  சமரசம் செய்து கொள்ள விரும்பாமல் பயணிக்கின்றோம்

அழகியின் வெற்றி என் படைப்பாற்றலுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. மக்களின் சுவையறியும் நுட்பத்திற்கு கிடைத்த வெற்றி. 

என்னை பாராட்டு மழையில் மகிழ்வித்து வரும் முகமறிந்த முகமறியா உள்ளங்களுக்கு என்னாலும் நன்றி நவில கடமைப்பட்டுள்ளேன். தங்கள் அனைவரின் விருப்பத்திற்கேற்ப ஒரு தரமான சிறந்த படைப்புடன் சந்திக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளேன.

வெற்றி பெரும் எனும் உறுதியான நம்பிக்கையுடன்! அழகியின் தாக்கத்திலிருந்து மீளாதவர்களை 'அழகி20' மீண்டும் கடந்த காலங்களுக்கு அழைத்துச்சென்றிருக்கிறது. 

இதே போன்ற ஒரு படைப்பினை மீண்டும் நான் தர வேண்டும் எனும் மக்களின் எண்ணத்தை பெரிதும் மதிக்கிறேன். தற்சமயம் திரைத்துறையில் அதற்கான சூழல் நிலவவில்லை என்பதுதான் உண்மை. 

இப்படத்தை தயாரிக்க நண்பர் உதயகுமார் என்னை நம்பி முன் வந்து முழுமையாக ஒப்படைத்தது போல் இன்னொருவர் அமையும் பொழுது மக்களின் எண்ணமும் எனது எண்ணமும் நிறைவேறும்". 2002 ஜனவரி 13 போகித்திருநாள் அன்று வெளியான “அழகி” (திரைப்படம்) யின் அகவை 20. இருபது ஆண்டுகள் உருண்டோடியுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை.

ஒவ்வொருநாளும் அழகி படம் ஏற்படுத்திய தாக்கத்தை,அவ்வப்போது கிளரப்படும் நினைவுகளை யாரேனும்  என்னுடத்தில் பகிர்ந்தது கொண்டே இருக்கின்றனர்.

திரைப்பட வணிகர்களால் புறக்கணிக்கப்பட்ட அழகி எனக்குள் ஏற்படுத்திய அதிகப்படியான வலிகள்,அவமானங்கள் என்னுயிர் பிரியும்வரை மறக்க இயலாதவை! அழகியை திரைப்பட வரலாற்றில் என்றைக்கும் பேசுபொருளாக மக்கள்தான் மாற்றினார்கள்!" என குறிப்பிட்டுள்ளார்.

அழகி படத்தில் பார்த்திபன் முன்னணி கதாநாயகனாகவும், தேவயானி, நந்திதா தாஸ், மோனிகா, விவேக், ஜார்ஜ் மரியம் ஆகியோர் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையில் இந்த படம் உருவானது. 

தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் பட்டியலில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த படத்தின் மூலம் சாதனா சார்கம் ஒரு தேசிய விருது பெற்றார், இந்த படத்திற்கு சிறந்த படத்துக்கான பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post