பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டியது கட்டாயம்! அதனூடாகவே தீர்வை காண முடியுமென சிவாஜிலிங்கம் தெரிவிப்பு - Yarl Voice பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டியது கட்டாயம்! அதனூடாகவே தீர்வை காண முடியுமென சிவாஜிலிங்கம் தெரிவிப்பு - Yarl Voice

பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டியது கட்டாயம்! அதனூடாகவே தீர்வை காண முடியுமென சிவாஜிலிங்கம் தெரிவிப்பு2025இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடைய சிம்மாசன உரை சம்பந்தமாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலர் பலவாறு விமர்சித்திருந்தார்கள். இதை நாங்கள் எத்தனை நாளைக்கு கூறிக் கொண்டிருக்க போகின்றோம்.
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

அதிலே சில விடயங்களை பொதுவாக நாட்டுக்கு சொல்லியிருக்கின்றார். நாடு பூராகவும் எழும்பிய கொந்தளிப்பு காரணமாக முதல் தடவையாக தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார் என்றே நாங்கள் கூற வேண்டும்.

இதை விட தொழில்நுட்பம், நீர்ப்பாசனம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கூறியிருந்தார்.
காணாமல்போனோர் விவகாரம் எல்லோருக்கும் பொதுவானது என்று கூற விழைகின்றார்.

படையினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும். ஆனால் அவற்றுக்கான நீதியை இலங்கை அரசாங்கத்தால் வழங்க முடியாது. ஆகவே இலங்கை அரசாங்கம் இதனை ஏற்றுக் கொண்டு சர்வதேச நீதி விசாரணையை நடாத்த வேண்டும். அதை விடுத்து திருப்பித் திருப்பி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

பொருளாதார ரீதியாக சில விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார். எத்தனை பேர் ஒத்துழைத்தாலும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுகின்றது. இதுவரை ஒத்துழைத்தவர்களால் எதை சாதிக்க முடிந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மூச்சும் விட்டு இருக்கவில்லை. மூச்சு விட்டிருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச ஆயத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய அரசியலமைப்புக்கான குழுவை ஜனாதிபதி நியமித்து இருந்தார்.அந்த குழுவுக்கு அரசியல் கட்சிகள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பித்திருந்தார். ஏறக்குறைய அது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சென்று வருமா வராதா என்ற நிலையில் காணப்படுகின்றது. 

இதுவே நல்லாட்சியிலும் நடந்தது. இதற்கு முதலில் அல்லவா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். இனிமேல் அழைத்து என்ன பேசப் போகிறீர்கள்.

பிரதான தமிழ் தேசிய மூன்று அணிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கூட்டணி கூட்டு
இணைப்பாட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஸ்டியையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
சமஸ்டியையும் கோருகின்றது.

ஆளால் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை அறவே இல்லை. இந்தச் சூழ்நிலையில் இனப்படுகொலை உட்பட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும்.

இதற்கு மூலவேரான தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல நாடுகளில் நடைபெற்றது போல பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டியது கட்டாயம்.

இதை விடுத்து 2025இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post