கொரோனா திரிபுகளை எதிர்கொள்ள மூன்றாவது தடுப்பூசியை அவசியம் பெறுங்கள்! வடக்கு மக்களிடம் கோரிக்கை - Yarl Voice கொரோனா திரிபுகளை எதிர்கொள்ள மூன்றாவது தடுப்பூசியை அவசியம் பெறுங்கள்! வடக்கு மக்களிடம் கோரிக்கை - Yarl Voice

கொரோனா திரிபுகளை எதிர்கொள்ள மூன்றாவது தடுப்பூசியை அவசியம் பெறுங்கள்! வடக்கு மக்களிடம் கோரிக்கை



கொரோனா திரிபுகளை எதிர்கொள்ள வேண்டுமாயின், மூன்றாவது தடுப்பூசியை (Pfizer) பெற்றுக்கொள்வது அவசியமானதாகுமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா நோய்க்கெதிரான தடுப்பூசி வாரம் இடம்பெற்று வருகின்ற நிலையில், ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் கார்த்திகை மாதம் முதல் மூன்றாவது தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கொரோனா நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது மட்டுமல்லாது தடுப்பூசியை காலக்கிரமத்தில் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும்.

எனினும் கவலைக்கிடமான வகையில் யாழ்மாவட்டத்தில் மூன்றாவது மேலதிக தடுப்பூசியை (Pfizer) பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதுவரை யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 30.59 வீதமானவர்கள் மட்டுமே தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை (Pfizer) பெற்றுக்கொண்டுள்ளனர்.

தொற்று நோயியலாளர்களின் அறிக்கைகளின்படி கொரோனா வைரசின் காலத்துடன் ஏற்படும் டெல்டா ஒமிக்ரோன் பொன்ற திரிபுகளை தடுப்பதற்கும் இப்பெருந்தொற்று நிலவும் காலத்தினை குறைப்பதற்கும் கொரோனா தொற்றினால் ஏற்படும் கடுமையானநோய்நிலையினை தடுப்பதற்கும் மற்றும் மரணங்களை குறைப்பதற்கும் தடுப்பூசிகளை உரியகாலக்கிரமத்தில் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

உலக சுகாதார அமைப்பின் அண்மைய ஆய்வின்படி இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தினத்திலிருந்து ஆறு மாதங்களின் பின்னர் தடுப்பூசியின் வினைத்திறனானது குறைவடையும் என கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக வயதுவந்தவர்களுக்கு ஏனையோரைவிட இவ்வினைத்திறனானது சற்று அதிகமாகவே குறைவடையும் என்பதும் முக்கியமான விடயமாகும்.

எனவே தற்போது ஏற்பட்டுவரும் கொரோனா திரிபுகளை எதிர்கொள்ள வேண்டுமாயின் இவ் மூன்றாவது தடுப்பூசியை (Pfizer) பெற்றுக்கொள்வது அவசியமானதாகும்.

மக்கள் தொகையில் குறைந்தது 70 வீதமானோர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே நாட்டில் கொரோனா பெருந்தொற்று ஏற்படாமல் தடுக்கமுடியும்.

அதன் மூலமே தடுப்பூசி போடுவதற்கு விருப்பமிருந்தும் உடல் நோய் நிலமைகளினால் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளாதவர்களையும் பாதுகாக்க முடியும்.

அவ்வாறு மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதால் ஏற்படப்போகும் கொரோனா பெருந்தொற்றினால் மிகப்பெரும் எண்ணிக்கையானவர்கள் தொற்றுக்குள்ளாவதுடன் அதிக எண்ணிக்கையான மரணங்களினையும் எதிர்கொள்ள நேரிடும்.

கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கு எமது உடலில் கொரோனா தடுப்பூசியின் வினைத்திறனானது உயர்வாக காணப்பட வேண்டும்.

எனவே காலத்துடன் குறைவடைந்து செல்லும் கொரோனா தடுப்பூசியின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு மூன்றாவது தடவையாக கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

மேலும் அண்மைக்காலமாக மீண்டும் நாடளாவிய மற்றும் மாகாண ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்காரணமாக அனுமதிக்கப்படபவர்களின் எண்ணிக்கையும் சிகிச்சையின் போது செயற்கை ஒட்சிசன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதும் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் பெருந்தொற்று அபாயத்தின் அறிகுறிகளாகும்.

யாழ் மாவட்டத்தில் தை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் மாசி மாதம் 05 ஆம் திகதிவரை தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாட்களில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், அதாவது 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபாம் தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக கொரோனா தடுப்பூசியானது (Pfizer) வழங்கப்பட உள்ளது.

இத்தடுப்பூசியினை இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆகக்குறைந்து மூன்று மாத இடைவெளியின் பின் பெற்றுக்கொள்ளலாம்.

இத்தடுப்பூசி வாரத்தின்போது தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் அறியத்தரப்படும்.

கொரோனா இற்காக இரண்டு தடுப்பூசிகளையும்; பெற்றுக்கொண்ட 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை (Pfizer)பெற்றுக்கொள்ள முடியும்.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு மாசி மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஊர்காவற்துறை தெல்லிப்பளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் இத்தடுப்பூசிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post