கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! - Yarl Voice கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! - Yarl Voice

கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு அவசர அவசரமாக நாள் குறித்து நேரம் தீர்மானித்து கோட்டாபய ராஜபக்ச விரித்துள்ள சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் வலியுறுத்திக்கொள்கின்றோம்.

சிறிலங்காவின் சனாதிபதி அழைத்தவுடன் வரிந்து கட்டிக்கொண்டு செல்வதற்கு இந்த விடயமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் குடும்ப விவகாரம் அல்ல. இலங்கையில் இருந்து வெள்ளையர்கள் வெளியேறிய காலத்தல் இருந்து திட்டமிட்ட ஒடுக்கு முறைகளைத் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் ஒரு தேசிய இனத்தின் இருப்புச் சம்பந்தமான பிரச்சினை.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளையும், நீதிக்கான கோரிக்கைகளையும் எதேச்சதிகார மனப்போக்கில் ஒட்டுமொத்தமாகவே நிராகரிப்பதுடன் நின்றுவிடாது திட்டமிட்ட இனவழிப்பு யுத்தத்தை ஆட்சி-அதிகார துணையுடன் வடக்கு, கிழக்கில் முழுவீச்சுடன் தொடர்ந்துவருவதுடன், தன்னை பௌத்த - சிங்கள மக்களின் தலைவனாகவே பகிரங்கமாக பிரகடனப்படுத்திவரும் இலங்கையின் இன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சூழ்ச்சித் திட்டமே பேச்சுக்கான அழைப்பாகும்.

அனைத்துலக ரீதியாக எழுந்துவரும் நேரடி, மறைமுக அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் சூழ்ச்சித் திட்டதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் தலைமைகள் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் கோரிக்கைகள் யாதென கோட்டா அன் கோவுக்கு நன்றாகவே தெரியும். அதனை எடுத்துச் சொல்வதற்காக இந்த சந்தரப்பத்தை பயன்படுத்த உள்ளோம் என்ற பேரில் கோட்டாவுடனான சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயப்படுத்த முனைவது வாக்களித்த மக்களை ஏமாற்றி கழுத்தறுக்கும்செயலாகும்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நோக்கிய முன்னெடுப்பு எதுவாக இருப்பினும், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அரசியல் செய்வதாக கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் செயற்பட்டுவரும் அனைவரும் ஓரணியாக செயற்படுவதன் மூலமே அவர்களது கூற்றை அர்த்தப்படுத்த முடியும்.

ஆகவே, அனைத்துலக அழுத்தங்கள், நெருக்கடிகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக கோட்டா விடுத்துள்ள பேச்சுக்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக மறுக்க வேண்டும் என்பதுடன், ஈழத் தமிழ் மக்களின் தீர்வு விடயம் தொடர்பான எந்த பேச்சுவார்தைகளாக இருந்தாலும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளுடனும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகளுடனும் இணைந்ததாகவே அமையவேண்டும். கல்லோயா குடியேற்றத் திட்டம் முதல் இன்றுவரை வரலாறு கற்றுத்தந்த பெரும் படிப்பினையூடாக சம்பந்தனும் சுமந்திரனும் இன்னும் கற்றுக்கொளவில்லை என்றால் இவர்கள் தங்கள் இருப்பிற்காக ஈழத்தமிழர்களை சிங்களத்திடம் அடகுவைக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

பௌத்த - சிங்கள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவும், அவர்களது உரிமைகளை பாதுகாக்கவுமாக பகிரங்க பிரகடனம் செய்துள்ள கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வை எதிர்பார்ப்பது கேலிக்கூத்தான விடயம்  என்பதுடன் எங்களை நாங்களே ஏமாற்றும் செயலாகும். இன்று வரை ஒரு நல்லெண்ண சமிக்ஞையைக் கூட காட்டாமல் தொடர்ச்சியாக தமிழர் பூர்வீக பிரதேசங்களில் புத்தமயமாக்கலைத் தொடரும் பேரினவாத சிங்கள அரசுடன் என்றுமே பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காணமுடியாது.

இலங்கைத் தீவின் ஆதி குடிகள் என்ற உரித்தின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு தயாராக உள்ளமையை வெளிப்படுத்தும் சமிக்ஞைகளை செயற்பாட்டு ரீதியாக கோட்டாபய அரசு காட்டிய பின்னரே தமிழ்த் தரப்பு பேச்சு தொடர்பில் சிந்திக்க முடியும் என்ற செய்தியை இடித்துரைத்து கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை முறியடிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுநிற்கின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post