விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவ்கள் நாமே. விடுதலைப் புலிகளை வன்முறையாளர்கள் போல காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் தகுதியுள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் என எம்.ஏ.சுமந்திரன் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபயவை சந்திப்பதில்லையென ரெலோ எடுத்த முடிவை சுமந்திரன் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.
நேற்று வவுனியாவில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமடைவேன் என கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாவை காப்பாற்ற எமது கட்சி வராததால் சுமந்திரன் ஏன் பதற்றமடைகிறார், கடந்த நல்லாட்சி காலத்திலும் ரணிலை காப்பாற்ற இதுபோலவே ‘விழுந்து விழுந்து’ பணியாற்றினார் என ரெலோ ஆதாரவாளர்கள் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், எம்.ஏ.சுமந்திரனின் கருத்திற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று பதிலளித்துள்ளார்.
அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
”தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கம் விலகிச் சென்றால் தமிழ் அரசு கட்சி சந்தோசப்படும் என சுமந்திரன் தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி, 10 வருடங்களின் பின்னரே சுமந்திரன் கட்சிக்குள் வந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ரெலோ முக்கிய பங்காற்றியிருந்தது. கிழக்கில் உள்ள தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் பலருக்கும் அது தேரியும்.
ஆயுதப் போராட்டத்தை வன்முறையென சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வன்முறையை ஏற்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.
சுமந்திரன் வன்முறையென குறிப்பிடும் வே.பிரபாகரனின் ஆசீர்வாதத்துடனேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த கூட்டமைப்பில் சுமந்திரன் எப்படி அங்கம் வகிக்க முடியும்.
இதேவேளை, சுமந்திரனின் கருத்து தமிழ் அரசு கட்சியின் கருத்தா என்பதை அந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், சுமந்திரனின் கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தை என்பதை இரா.சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்.
போராட்டத்திலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் ஒரு துளியளவு பங்களிப்பையும் செலுத்தாதவர் சுமந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அனைவருக்கும் முன்பாகவே எமது முடிவை அறிவித்தோம். எமது முடிவு ஜனநாயகரீதியிலானது என இரா.சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.
சுமந்திரன் பல தடவைகள் சீண்டிய போதும், நாம் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மௌனம் சாதித்தோம். இப்பொழுது சுமந்திரன் சொன்ன கருத்து பாரதூரமானது. அதற்கு பதிலடி கொடுப்போம்.
எம்மை துரோகிகள் போல சுமந்திரன் பொய்யான கருத்தை தெரிவித்திருந்தார். நாம் துரோகிகளாக புலிகளால் பார்க்கப்பட்டிருந்தால், கூட்டமைப்பை உருவாக்கும் பணியை புலிகள் எம்மிடம் தந்திருக்க மாட்டார்கள்.
விடுதலைப் புலிகளும், ரெலோவும் எப்படி அன்னியோன்யமாக செயற்பட்டார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களிற்கும், விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளிற்கும் நன்கு தெரியும். வவுனியாவில் புலிகளுடன் சேர்ந்து செயற்படுவதாக கூறி, எமது உறுப்பினர்களும், அலுவலகங்களும் தாக்கப்பட்டிருந்தன.
எம்மையும் புலிகளையும் பற்றி பேசும் தகுதி சுமந்திரனுக்கு கிடையாது” என்றார்.
Post a Comment