அடையாள‌ வேலைநிறுத்தம் குறித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை - Yarl Voice அடையாள‌ வேலைநிறுத்தம் குறித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை - Yarl Voice

அடையாள‌ வேலைநிறுத்தம் குறித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை




முன்னெப்போதும் இல்லாத‌ ஒரு நெருக்கடி இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ளது. உணவு, பால்மா, மருந்துகள், எரிபொருள், எரிவாயு போன்ற‌ அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல மடங்குகளாக அதிகரித்துள்ளன. அவற்றுக்குக் கடுமையான தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நெருக்கடி நாட்டின் எல்லாத் தரப்பினரையும் பாதித்திருந்தாலும், அது உழைக்கும் மக்களையும், வரலாற்று ரீதியாக‌ சமூக, சாதிய, பொருளாதார‌ ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகங்களையும், விவசாயிகளையும், கடற்றொழிலாளர்களையும், சிறு வியாபாரிகளையும், வடக்குக் கிழக்கிலே போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் மோசமாகப் பாதிக்கிறது. இந்தப் பாதிப்புக்களுக்கு எதிராகவும், ஜனநாயகத்தினை வலியுறுத்தியும், எதேச்சாதிகாரம் ஒழிக்கப்படுவதனைக் கோரியும், இன்று நாடாளவிய ரீதியில் ஒரு வேலைநிறுத்தத்தினை நூற்றுக்கணக்கான‌ தொழிற்சங்கள் முன்னெடுக்கின்றன. இந்தப் போராட்டத்திலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் இணைந்துகொள்ளுகிறது.

அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை காரணமாக நாடு ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ளப் போகிறது என்ற எச்சரிக்கை கடந்த சில ஆண்டுகளாகப் பலராலும் விடுக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய‌ அரசாங்கம் அவ்வாறான எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, தனது அதிகாரத்தினை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினை மேலும் பலப்படுத்தும் வகையிலே அரசியலமைப்பின் 20ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான மீறல்கள் இந்தக் காலப் பகுதியிலே மோசமான முறையிலே முன்னெடுக்கப்பட்டன. கோவிட் நெருக்கடிக்கு மத்தியிலே நாட்டின் நிருவாகக் கட்டமைப்பு கடுமையாக இராணுவமயமாக்கப்பட்டது. 

1977இன் பின்னர் திறந்த பொருளாதார முறையிலே, கட்டற்ற வகையில் இறக்குமதிகள் ஊக்குவிக்கப்பட்டமை, உண்ணாட்டு உற்பத்தியினை அதிகரித்து ஏற்றுமதியினை விரிவுபடுத்த அரசு தவறியமை, நீண்ட‌ போரினால் ஏற்பட்ட‌ செலவுகள், செலவு மிக்க, ஆனால் மக்களின் நாளாந்த வாழ்க்கைக்குப் பயனற்ற‌, ஆடம்பர உட்கட்டுமாணத் திட்டங்கள், உயர் வர்க்கத்தினரிடம் கூடியளவிலான வரிகளை அறவிடப்படாமை, பிணைமுறைகளினை சர்வதேச சந்தையில் வைத்து அதிக வட்டிக்குக் கடன்களைப் பெற்றமை, நிருவாகத் துறையில் நிலவும் ஊழல்கள், முறைகேடுகள் இன்றைய நெருக்கடிக்கான‌ நீண்டகாலக் காரணிகளாக அமைகின்றன.

இந்த நெருக்கடிக்குத் தீர்வு பெற‌ சர்வதேச நாணய நிதியத்தினை அரசு நாடியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் நெருக்கடியினைச் சமாளிப்பதற்காக அரசினால் வழங்கப்படும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றுக்கான செலவினைக் குறைக்க அரசை நிர்ப்பந்திக்குமாயின், அல்லது எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்தச் சொல்லுமாயின், நாட்டிலே ஏற்கனவே வறுமையினால் பாதிக்கப்படுவோர் கூடுதல் நெருக்கடியினை எதிர்கொள்ளும் நிலை உருவாகும். செல்வ வரி, வருமான மீள்பங்கீடு, நிலப் பங்கீடு போன்றன‌ மூலம் மக்களிடையே இருக்கும் பொருளாதார அசமத்துவங்களை நீக்குவதன் மூலமும், இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி, உண்ணாட்டு உற்பத்தியினை அதிகரிப்பதன் மூலமும், பொறுப்புக் கூறலை உறுதி செய்யும் நிருவாகக் கட்டமைப்புக்களை உருவாக்குவதன் மூலமுமே, ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சமூகங்களை மேலும் பாதிக்காத வகையிலான தீர்வுகளைக் காண முடியும். இந்தத் திசையிலே அரசு செயற்பட‌ நாம் போராட வேண்டும். 

பொருளாதாரப் பிரச்சினையுடன் இணைந்த வகையில் அரசியல் நெருக்கடியினையும் நாடு தற்போது எதிர்கொள்ளுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளமை காரணமாக எதேச்சாதிகார‌ அரசியல் கலாசாரம் ஒன்று எமது நாட்டிலே வேரூன்றிப் பரவியுள்ளது. இதனால் பொருளாதாரம் சார் தீர்மானங்கள் எடுத்தலில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்பு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் இனவாத அரசியல், மக்களின் கவனத்தினைப் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பி, நெருக்கடி தீவிரமடைவதற்குப் பங்களிப்புச் செய்துள்ளது. 

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்கு எதிராக மோசமான இனவாதக் கருத்துக்களைப் பரப்பியும், இன வன்முறையினை ஏவி விட்டும், போர்க் குற்றங்களைப் புரிந்தும், சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தினை இந்த நாட்டிலே ஆழப்படுத்தியுள்ளன. இந்தப் பிரச்சினைகள் குறித்து வடக்குக் கிழக்கிலும், வெளியிலும் சிறுபான்மை மக்கள் பேசிய போதும், போராடிய போதும், தென்னிலங்கையில் இருக்கும் தொழிற் சங்கங்களும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களும், மாணவர் அமைப்புக்களும், இடதுசாரி அமைப்புக்களும் போதிய அளவிலே பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. தென்னிலங்கையிலே பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் போராடிய ஒருவர் அண்மையிலே ரம்புக்கனையிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தெற்கிலாயினும், வடக்கிலாயினும் ஜனநாயகப் போராட்டங்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான அரச‌ அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்காக நாட்டின் எல்லா சமூகங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டும்.

நாட்டின் தென்பகுதியிலே எதேச்சாதிகாரத்துக்கு எதிராகவும், பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும் இன்று இடம்பெறும் போராட்டங்கள் ஒரு புதிய ஜனநாயகம் மிக்க, சமத்துவம் மிக்க, பன்மைத்துவத்தினை மதிக்கின்ற சமூகத்தினையும், அரசினையும் உருவாக்குவதனை இலக்காகக் கொண்டிருப்பின், நாட்டின் வடக்குக் கிழக்கிலும், ஏனைய பகுதிகளிலும் இனவாத அரசியலினால் பாதிக்கப்பட்ட குரல்களுக்கும், போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கி, அந்தப் போராட்டங்களிலே தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் போராட்டங்களின் கோரிக்கைகளைத் தமது போராட்டங்களின் கோரிக்கைகளாக அரவணைத்து முன்கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறான முயற்சிகளே வடக்கு கிழக்கு மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும், தென்னிலங்கையில் தற்போது இடம்பெறும் போராட்டங்களிலே நம்பிக்கையினை உருவாக்கும்; அவர்களையும் அந்தப் போராட்டங்களிலே அதிக எண்ணிக்கையில் இணைய வைக்கும். இதன் மூலமாகவே நாம் ஜனநாயகத்தினையும், சமத்துவத்தினையும், நீதியினையும் வென்றெடுக்க முடியும்; இதன் மூலமாகவே நாம் எதேச்சாதிகாரத்தினை ஒழிக்க முடியும். இவ்வாறான‌ முயற்சிகளிலே நாட்டின் தொழிற்சங்கள், முற்போக்கு அமைப்புக்கள், மாணவ அமைப்புக்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், கூட்டுறவு அமைப்புக்கள், பெண்களின் அமைப்புக்கள் இன, மத, பிராந்திய பேதம் கடந்து ஒன்றிணைய வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கிறது.

எமது கோரிக்கைகள்:

1. நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு கிட்டும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உடனடியாகப் பதவி விலகி, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் உருவாகும் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையிலும், போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் எதிர்பார்ப்புக்கு அமையவும் ஒரு இடைக்கால அரசு உருவாக வழி செய்தல்.

2. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வாக மக்களுக்குப் பாதிப்பற்ற, வறிய, உழைக்கும், விளிம்பு நிலை, வரலாற்று ரீதியாக ஒடுக்குமுறைகளைச் சந்தித்த, போரினால் பாதிக்கப்பட்ட‌ மக்களின் நலன்களை முன்னிறுத்திய சமூக நீதி அடிப்படையிலான தீர்வுகள் உருவாக்கப்படல்.

3. நாட்டின் இலவசக் கல்வி, இலவச மருத்துவத் துறைகள் பாதுகாக்கப்படல்.

4. ஆட்சியாளர்களினால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட, அபகரிக்கப்பட்ட நாட்டின் செல்வம் நாட்டுக்கு மீளத்திருப்பச் செலுத்தப்பட வேண்டும்; அதற்கான நீதிச் செயன்முறைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

5. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும்.

6. அரசியலமைப்புச் சபையின் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளடங்கலாக‌ சுயாதீனமான, அரசியல்மயமாக்கப்படாத‌ ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

7. எந்த ஒரு மதத்துக்கும் முன்னுரிமை கொடுக்காத அரசு உருவாக்கப்பட வேண்டும். ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு வடக்குக் கிழக்கிலே சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வு வழங்கப்படல் வேண்டும்.

8. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசியற் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டும்.

9. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும்.

10. போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும்; நீதி வழங்கப்பட‌ வேண்டும்.

11. போரிலே இறந்த மக்களையும், போராளிகளையும் சமூகமாக நினைவுகூருவதற்கான சுதந்திரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

12. நாட்டின் சமய, இன, கலாசாரப் பன்மைத்துவத்தினையும், சிறுபான்மையினரையும் பாதிக்கும் நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும்.

13. வடக்குக் கிழக்கிலே இராணுவமய நீக்கம் இடம்பெற வேண்டும்; அரசின் எல்லாக் கட்டமைப்புக்களிலும் இராணுவமய நீக்கம் இடம்பெற வேண்டும்.

14. தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை போன்றவற்றின் மூலம், இனவாத நோக்கில் வடக்குக் கிழக்கில் இடம்பெறும் குடியேற்றங்கள், கலாசார அடையாளத் திரிபுகள், நில அபகரிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

15. சாதிய, வர்க்க, பால் நிலை ரீதியிலான ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட்டு, சமத்துவம் நிலைநாட்டப்படல் வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post