தமிழ் இளைஞர்கள் மிகவும் நிதானத்தோடு செயற்பட வேண்டும்!! சிறிதரன் எம்பி கோரிக்கை - Yarl Voice தமிழ் இளைஞர்கள் மிகவும் நிதானத்தோடு செயற்பட வேண்டும்!! சிறிதரன் எம்பி கோரிக்கை - Yarl Voice

தமிழ் இளைஞர்கள் மிகவும் நிதானத்தோடு செயற்பட வேண்டும்!! சிறிதரன் எம்பி கோரிக்கைஇத்தகைய நிலைக்குக் காரணமான ஜனாதிபதியே முதலில் பதவி விலகியிருக்க வேண்டும் எனவும் சமகால நிலை தொடர்பில் தமிழ் இளைஞர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

 
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் சமகால நிலை தொடர்பில்  இடம்பெற்ற  ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நாடு   மிக மோசமான நிலையை எட்டியிருக்கின்றது. வன்முறை உச்சத்தை தொட்டிருக்கின்றது. ராஜபக்சக்களின் குண்டர்கள் நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் இடங்களுக்குள் புகுந்து அவர்களை தாக்கியிருக்கின்றார்கள்.

அதனால் கோபம் கொண்ட எமது மக்கள் மாவட்டங்கள் தோறும் வன்முறைகளை கையில் எடுத்திருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு நிலைகுலைந்திருக்கின்றது. இந்த நாடு மிக மோசமான நிலைக்குள் தள்ளிச்சென்றுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாத்திரமல்ல மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்களிடம் நான் ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கின்றேன்.

நாங்கள் இந்த இடைக்காலத்தில் நிதானமாகவும், பொறுமையாகவும் எங்களது நிலைகளை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தமிழ் இளைஞர்கள் கடைப்பிடித்த அமைதியும் நிதானமும் எங்களுக்கு ஒரு பெரு வெற்றியைத் தந்திருக்கின்றது.

தொடர்ந்து அந்த வெற்றியை தக்கவைக்க வேண்டுமானால், இன்னும் சிறிது நாட்கள் நாங்கள் மிகவும் நிதானமாக நடக்க வேண்டும். ஏற்கனவே பல கொலைகளையும் அராஜகங்களையும் சந்தித்த நாங்கள், தற்பொழுது அரசு இருக்கும் நிலையில் தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி வைத்திருந்தார்கள் அல்லது போராடினார்கள் என்பதை காண்பித்து அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய சூழல் உள்ளது.

இந்த நிலையில் இளைஞர்கள் நிதானமாக செயற்பட வேண்டும் என்று வினயமாக கேட்டுக்கொள்கின்றேன். அதிலும் குறிப்பிபாக, இலங்கையில் நடப்பது வன்முறைக்கு பதில் வன்முறையாக இருக்கக்கூடாது.

அதற்கு பதிலாக அரசாங்கத்தை ஜனநாயக வழியிலே வீட்டுக்கனுப்ப முயற்சித்தவர்கள் வன்முறையை கையில் எடுத்திருப்பதானது மிக மோசமானது.

இவ்வாறான நிலையில் எங்களையும் வலிய இழுத்து செல்லக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உண்டு ஆகவே, வடக்கு கிழக்கு மலையகத்தில் உள்ள இளைஞர்கள் மிக நிதானத்தோடு செயற்பட வே்ணடும் என கரிசனையோடு கேட்டுக்கொள்கின்றேன்.

பிரதமர்  மஹிந்த பதவியிலிருந்து விலகியிருப்பதென்பது இந்த நாட்டிற்கு பெரிய விடயமாக நான் பார்க்கவில்லை. இந்த நாட்டினுடைய ஜனாதிபதி உடனடியாக பதவி விலகியிருக்க வேண்டும். அப்படி விலகியிருந்தால்தான் நாட்டில் இருக்கக்கூடிய நெருக்கடிக்கு தீர்வினை கொண்டு வந்திருக்க முடியும்.

ஆனாலும் அவர் பதவி விலகியிருப்பது ஏனைய அமைச்சர்களும் இயல்பாகவே பதவி விலகுவதற்கான சூழலாக இருக்கின்றது. இந்த நிலைமை இலங்கையின்  தற்போதைய நிலை அரசியல் களச்சூழலில் ஒரு சிறிய ஆறுதலை தரும் என்று எதிர்பார்க்கின்றோம்.

குறிப்பாக கோட்டாபாய ராஜபக்‌ஷ நாட்டை தவறாக வழிநடத்திய பொறுப்பை தானே ஏற்று பதவி விலகிச் செல்ல வேண்டியவர். அவர் அதனை செய்ய வேண்டும். செய்யவில்லை எனில் இன்னும் இந்த நாடு திருத்தத்திற்குள் வரவில்லை என்பதுதான் ஜதார்த்தமான உண்மையாகும்” என அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post