இந்தியாவின் கரிசனையால் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான தனி நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க முடியும் - Yarl Voice இந்தியாவின் கரிசனையால் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான தனி நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க முடியும் - Yarl Voice

இந்தியாவின் கரிசனையால் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான தனி நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க முடியும்



இந்தியாவினுடைய கூடுதலான கரிசனையிலும், உதவி வழங்கும் நாடுகளையும் இணைத்து வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான தனி நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பரசியல் பாதிப்படைய செய்யுமல்லவா எனவும், அதற்கான மாற்று திட்டங்கள் உள்ளதா எனவும் ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது இவ்விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் 30 வருடங்களிற்கு மேல் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009க்கு முதலே 30 ஆண்டுகளிற்கு மேலாக தொடர்ச்சியான பொருளாதார தடை, மக்கள் உழைக்கக்கூடிய சூழல் இல்லா நிலை குறிப்பாக 10 ஆண்டுகளாக மின்சாரம் என்றால் என்ன என்று கேள்வி கேட்குமளவிற்கு வடக்கு கிழக்கிலே மக்கள் வாழ்ந்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான் பொருளாதார ரீதியில் மக்கள் ஒடுக்கப்பட்டு உற்பத்தி தொழில்துறைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் யுத்தத்தை காரணமாக காட்டிக்கொண்டிருந்தார்கள். உலக நாடுகளும் இலங்கை அரசு சொல்வதை கேட்டு வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு பின்னின்றன.

யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென பெருந்தொகையான நிதியை இலங்கை அரசுக்கு உலக நாடுகள் வழங்கியிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்ட நிதிகளைக்கூட அதிவேக பாதைகள், தெற்கின் அபிவிருத்திகளிற்கு இலங்கை அரசு பயன்படுத்தியபோது, அதனை கண்காணிக்கக்கூடிய நிலை இல்லாமல் எங்களுடைய பொருளாதாரம் கீழ் நிலைக்கு சென்றுள்ளது.

எங்கள் மக்களின் தற்துணிவும், அவர்களது சுய நம்பிக்கையும் தாங்கள் உழைத்து வாழ்வோம் என்ற எண்ணமும் இருந்தமையால்தான் இன்று பல நீண்ட நாட்களாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் தங்களது சுய பொருளாதாரத்தில் பொருளாதாரத்தை கட்டி நிமிர்த்தி வருகின்றார்கள்.

இந்த நிலையிலே இடைக்கால பொருளாதார நிர்வாகம் தொடர்பிலே பேச்சுக்கள் அடிபடுகின்றது. இது ஒரு நல்ல விடயமாக பலராலும் பார்க்கப்படுகின்றது. நானும் அதனை சாதகமான செய்தியாக பார்க்கின்றேன்.

குறிப்பாக யுத்தம் நடந்து 30 ஆண்டுகள் அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கடந்து 42 ஆண்டுகள் இந்த மண்ணிலே கடந்திருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இளைஞர்களிற்கான தொழில்வாய்ப்பு உள்ளிட்டவை குறைந்திருக்கின்றது. இல்லையென்றும் சொல்லலாம்.

இதற்கான வாய்ப்பாக வடக்கு கிழக்கிற்கான தற்காலிக வாய்ப்பாக வடக்கு கிழக்கினை இணைந்த வகையில் குறிப்பிட்ட சில ஆண்டுகளிற்கு பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான இடைக்கால நிர்வாகத்தினை உருவாக்குவது காலத்திற்கு பொருத்தமானது என கருதுகின்றோம்.

இது தொடர்பில் புத்திஜீவிகள், புலம்பெயர் உறவுகள் உள்ளிட்டவர்கள் மத்தியில் இந்த விடயம் பரவலாக பேசப்படுகின்றது. இதில் மிக முக்கியமாக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக தமிழ் மக்களினுடைய அரசியல் அங்கிகாரத்தினை பெற்றுக்கொள்ளுதல், அந்த அரசியல் அங்கிகாரம் என்பது வடக்கு கிழக்கு அபிவிருத்தியினால் கட்டப்படுவது தொடர்பில் சிங்கள மக்களிற்கு கூட்டாக அவர்களிற்கு விளங்கும் வகையில் சொல்வதாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு, சமஸ்டி என கூறுவது தமிழீழம் எனும் தனிநாடு என சிங்கள மக்கள் மத்தியில் பயக்கின்றது. ஆகவே இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக ஒரு நிர்வாகம் ஒன்று கிழக்கையும், வடக்கையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டால் சிறப்பாக அமையும்,

ஏற்கனவே இவ்வாறு1987ம் ஆண்டு ஒரு கட்டமைப்பு எழுத்து வடிவிலே பேசப்பட்டு எழுத்துடனேயே போய்விட்டது. சிரான் அமைப்பும் இவ்வாறான நிர்வாக கட்டமைப்பை வரைந்தது. அதுவும் அரசியல் மாற்றங்களால் இல்லாது போனது. அது நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை.

இப்பொழுது இருக்கின்ற சூழல் இலங்கையின் அரசியலமைப்புக்குள் இந்தியாவினுடைய கூடுதலான கரிசனையில் உதவி வழங்கும் நாடுகளையும் சேர்த்துக்கொண்டால் வடக்கு கிழக்கிற்கான தனி கட்டமைப்பினை உருவாக்க முடியும்.

யுத்த காலத்தில் தென்னிலங்கையில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அங்கு அபிவிருத்தி அடைந்திருக்கின்றது என்பதுடன், எல்லா மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் மற்றம் துறை சார்ந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வேலைவாய்ப்புக்களும் வழங்ப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. காரணம் யுத்தம். இதனை நிமிர்த்துவதற்கான ஒரு வழியாக இந்த இடைக்கால நிர்வாகத்தினை நாங்கள் பார்க்கின்றோம். இதன் ஊடாக நாட்டுக்கு நிதியை கொண்டுவர முடியும்.

குறிப்பாக உலக நாடுகளின் நிதி, இந்தியாவின் நேரடி கண்காணிப்பில் முதலீடுகளை கொண்டு வருதல், இந்தியாவின் மேற்பார்வையில் கொண்டு வருவதன் ஊடாக பல சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை வடக்கு கிழக்கிலே அதிகரிப்பதன் மூலம் தொழில் துறைகளை இயக்க முடியும். குறிப்பாக ஆனையிறவில் உள்ள குறிஞ்சாதீவு உப்பளம், மட்டக்களப்பு காகித தொழிற்சாலை உள்ளிட்ட மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை இப்பொழுது இருக்கின்ற காலத்திற்கேற்ற தொழிற்சாலைகளாக மாற்றியமைப்பதன் மூலம் உடனடி வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும்.

அதேபோன்று பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் கைத்தொழில்பேட்டை ஒன்றை உருவாக்குவதன் மூலம் அதில் பல்வேறுபட்ட தொழில் துறைகளை உருவாக்க முடியும். வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சந்திக்கக்கூடிய பகுதியாக பரந்தன் பகுதி உள்ளது.

அவ்வாறான தொழிற்துறைகளை முன்னெடுப்பதன் மூலம் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி அலையொன்றை அல்லது தொழில் புரட்சியொன்றை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் இந்த இடைக்கால நிர்வாகம் தொடர்பில் நாங்கள் சிந்திக்கின்றோம். இது தொடர்பில் நாங்கள் பல தடவை சிந்திக்க இருக்கின்றது. இது தொடர்பில் கட்சியின் உயர் மட்டத்திலும் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுடனும் இது தொடர்பில் கூடி ஆராய்ந்து அவர்களின் கருத்துக்களும் பெறப்பட்டு வடக்க கிழக்கில் பொருளாதார ரீதியாக ஒரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசியல் உள்ளிட்ட விடயங்களிற்கும் பலத்தை தரும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

இதேவேளை வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்களை தடுத்து வடக்கு கிழக்கினை பாதுகாக்க முடியும் என்பதுடன், வடக்கு கிழக்கு என்றால் அது தமிழீழம் அல்ல என்பதையும், உலகத்தில் உள்ள சமஸ்டியின் கூடிய அலகாக இந்த நாட்டில்தான் இருக்கின்றது. அவர்கள் அப்படி வாழ வேண்டும் என்பதில் நியாயம் உள்ள என்பதை சிங்கள மக்கள் உணரக்கூடிய வகையிலான செயற்பாடடை அதன் ஊடாக கொண்டுவர முடியும்.

அதுதான் தென்பகுதி மக்களிற்கும் நன்மையை கொண்டு வரும். ஏனென்றார் நிதி நாட்டுக்குள் கொண்டுவரப்படும்போது இலங்கையின் பொருளாதாரத்திலும் கடுமையான வளர்ச்சியினை கொண்டுவரும். சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த காலத்தில் இடைக்கால நிர்வாகம் என்பது எங்களிற்கு அவசியமானது.

அது தொடர்பில் தூர நோக்கோடும், நல்லெண்ணத்தோடும் ஒவ்வொருவரும் சிந்தித்தால் வாய்ப்பானதாக அமையும் என்று நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறான விடயத்தை நடைமுறைப்படுத்த முற்படுகின்ற பொழுது மத்திய அரசினை நீங்கள் எதிர்க்கின்றபொழுது அவர்களும் இதனை எதிர்ப்பார்கள் அல்லவா என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்,

சுனாமி ஏற்பட்ட குறிப்பிட காலத்தில் இவ்வாறான நிர்வாக அலகு ஒன்றை சிரான் அமைப்பு விரைந்து முயற்சி எடுத்தபொழுது ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க இருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் அது கைவிடப்பட்டது. தற்பொழுது அவர் பிரதமராக இருப்பதால் குறித்த திட்ட வரைபை அவர் மறுக்கமாட்டார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post