"நாட்டைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கடித்த ராஜபக்சக்களின் தர்பார் முற்றாக 'அவுட்' ஆகும் நிலையில் இருந்தது. அதற்குள், அறிவற்ற முறையில் இடையில் புகுந்து, அவர்கள் மூச்சு வாங்குவதற்கு நேரம் பெற்றுக்கொடுத்து, ராஜபக்சக்களின் அதிகாரத்தைக் காப்பாற்றித் தக்கவைக்க வழிசெய்தவர் ரணில் விக்கிரமசிங்கதான். அதன்மூலம் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் அரசியல் ரீதியாக அவர் வரலாற்றுத் தவறிழைத்திருக்கின்றார்."
- இவ்வாறு சாரப்பட சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
கொழும்பின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இந்த விடயங்களை விவரித்திருக்கின்றார்.
அந்தப் பேட்டியில் சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு:-
"ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்ட இந்தப் பிரதமர் பதவியேற்பு சவாலை அறிவுள்ள வேறு எவருமே செய்திருக்கமாட்டார்கள். செய்ய முன்வந்தும் இருக்கவில்லை.
உண்மையில் அவர் (ரணில்) செய்த விடயம் என்னவென்றால் ராஜபக்சக்களுக்கு நெருக்கடிக்கு மத்தியில் நின்று மூச்சு விடுவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்தமைதான். அதன்மூலம் அவர்கள் மீண்டும் தங்களை - தங்கள் அணியை ஒழுங்குபடுத்திக்கொண்டு வந்துள்ளார்கள். ரணிலின் நடவடிக்கையால்தான் மஹிந்த ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வர முடிந்திருக்கின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களைத் தாக்குவதற்குக் குண்டர்களை ஏவி விட்டுவிட்டு, இப்போது அவர்களைப் (காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை) பார்த்து உங்கள் கைகளிலும் இரத்தக்கறை இருக்கின்றது என்று அவர் நாடாளுமன்றத்தில் சுட்டு விரல் நீட்டும் வாய்ப்பை ரணில்தான் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.
இன்றைய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்குக் கடந்து வந்த முன்னைய அரசுகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் காரணம் என்றாலும் மிக மோசமான நிலைமை ஏற்பட்டமைக்கு இப்போதைய ஆட்சிப்பீடம்தான் முக்கிய காரணம். அது மக்களாலும் உணரப்பட்டுள்ளது. அதனால்தான் பிரதமர், மத்திய வங்கி ஆளுநர், திறைசேரிச் செயலாளர் எல்லோரும் பதவி விலக வேண்டி வந்தது. பெரும் தவறுகள் - குற்றமிழைத்தவர்கள் பதவியிலிருந்து விலகித்தானாக வேண்டும். ஆனால், மிக விநோதமான விடயம் என்னவென்றால் குற்றமிழைத்தவர்கள் - இரண்டாவது மட்டத்தில் இருக்கின்றவர்கள் பதவி விலகி விட்டார்கள். ஆனால், பிரதான நபர் - தவறுகள் இழைக்கப்பட்டமைக்குப் முழுப் பொறுப்பான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னமும் பதவியில் இருக்கின்றார். அவர் அப்படிப் பதவியில் இருப்பதற்கு அவருக்கான அந்த இடத்தை - வாய்ப்பை அவர் வெளியேறாமல் பதவியைத் தொடர்வதற்கான இடைவெளியை ப் பெற்றுக்கொடுத்தவர் ரணில்தான். நிபந்தனை எதுவும் விதிக்காமல் பிரதமர் பதவியை ஏற்று, அந்த இடைவெளியை ஜனாதிபதிக்கு அவர் பெற்றுக்கொடுத்து, அவர் பெரும் தவறிழைத்திருக்கின்றார்.
தமக்கு அளிக்கப்பட்ட 69 இலட்சம் வாக்குகளை இனிமேலும் மக்கள் ஆணையாகக் கருத முடியாது என்ற நிலைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே வந்திருந்தார். அவர் பதவியைத் துறந்து அல்லது கையளித்து அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்து ஓர் ஒழுங்குக்கு வருவதற்கு இடையில் எந்த முன் நிபந்தனைகளையும் இல்லாமல் இடையில் புகுந்து பிரதமர் பதவியை ஏற்று ரணில் குழப்பி விட்டார்.
இப்போது பதவியை - அதிகாரத்தை விட விருப்பமில்லாமல் அவர் அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார் கோட்டாபய. தவிரவும், அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் செய்த பல விடயங்கள் - தவறுகள் மூடி மறைக்கப்பட வேண்டும், அதற்கு அதிகாரத்தில் இருப்பதே ஒரே வழி என்பதால் அதிகாரத்தைப் பற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
போர்க்குற்றங்கள்
போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் ஓடிவிட்டன என்பதற்காகப் போர்க்குற்ற விடயங்கள் மறைந்து அல்லது மறந்துபோக மாட்டா. அத்தகைய விடயங்கள் மறைந்து போவது என்பது வழமையே இல்லை. கம்போடியாவில் 30 வருடங்களுக்குப் பின்னரும் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையை நாங்கள் மறந்து விடக்கூடாது. எவரும் கூறும் மறுப்புகளும் அல்லது பொருத்தமற்ற கூற்றுக்களும் அத்தகைய விடயங்களை மறைத்து விடவே மாட்டா.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உண்மையைக் கண்டறிவதற்கு, உண்மையான - வலிமையான ஒரு கட்டமைப்பை, விசாரணைக் குழுவை அமைப்பதுதான்.
இரண்டு பக்கமும் விசாரிக்கப்பட வேண்டும். அதில் வேறு கருத்து இல்லை. அத்தகைய விடயங்கள் நேர்மைத் தன்மையுடனும் வெளிப்படையாகவும் முன்னெடுக்கப்படுமானால், அதன் பின்னர் அந்த விடயங்களைத் தள்ளிவைத்து விட்டு, அதிலிருந்து முன் நகர்வதற்கான முடிவுக்கு எங்களுடைய மக்கள் வருவார்கள் என்று நான் நம்புகின்றேன். முக்கியமான சம்பவங்கள் சில ஆழமாக நுணுகி விசாரிக்கப்பட வேண்டும்தான். ஆனாலும், ஒட்டுமொத்தத்தில் அவை முழுவதையும் சுமந்துகொண்டு, பழிவாங்கிக் கொண்டிராமல், அவற்றைப் பக்கமாக வைத்து முன்னேறுவதற்கான மனப்பாங்கு அதற்குப் பின்னர் வரும்.
எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து எமது மக்களும் அப்போது சிந்திப்பார்கள். அப்படி இல்லாமல் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு நீங்கள் முன் நகரலாம் என்று நினைத்தால், அது உள்ளே புண்ணாக்கி சீழ் பிடித்து, நெருக்கடியாக வலி வருவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
இனப்பிரச்சினைத் தீர்வு
பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் இந்த நாடு நீண்ட இனப்பிரச்சினை நெருக்கடிக்குள் சிக்குண்டு கிடக்கின்றது. அதற்கும் நாங்கள் தீர்வு காணவேண்டும். அதற்கு இந்த நாட்டில் உள்ள எல்லா மக்களுடைய நோக்கத்தோடும் ஒரு புரிந்துணர்வு தீர்வை நாங்கள் காண்போமானால் அது உலகளாவிய ரீதியில் இலங்கையின் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இன்றைய பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்வதற்கும், சர்வதேசத்தின் நம்பிக்கையை - எங்கள் மீதான அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வதற்கு இத்தகைய நல்லிணக்கம் எங்களுக்குள் இருக்கின்றது என்ற வெளிப்படுத்தல் மிகுந்த ஊக்கமாக அமையும். புலம்பெயர் தேசத்தில் இருக்கும் எங்கள் மக்கள் மாத்திரமல்லாமல், சர்வதேசமே எங்களின் மீது நம்பிக்கை வைத்து எங்களோடு பங்காளிகளாக சேர்ந்து இயங்கி, நமது நாட்டைத் தூக்கி விடுவதற்கான சூழலை ஏற்படுத்தும். ஆகவே, இனப்பிரச்சினைக்கான தீர்வும் உடனடியாக விரைந்து காணப்பட வேண்டும். இதுவே அதற்கான பொருத்தமான - கட்டாயமான - மிக முக்கியமான சந்தர்ப்பம்" - என்றார்.
Post a Comment