ஓகஸ்ட் 9இல் விரட்டப்படுவார் ரணில் - எச்சரிக்கின்றார் அநுரகுமார - Yarl Voice ஓகஸ்ட் 9இல் விரட்டப்படுவார் ரணில் - எச்சரிக்கின்றார் அநுரகுமார - Yarl Voice

ஓகஸ்ட் 9இல் விரட்டப்படுவார் ரணில் - எச்சரிக்கின்றார் அநுரகுமார

 

"ராஜபக்சக்கள் மக்களால் எப்படி விரட்டப்பட்டார்களோ அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி விரட்டியடிக்கப்படுவார்."

- இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். 

காலிமுகத்திடல் மக்கள் போராட்டம் ஜூலை 14ஆம் திகதி வெற்றியுடன் முடிந்து விட்டது என்றும், அதன் பின்னர் அங்கு கிளர்ச்சிக்கான ஆயத்தங்களே நடைபெற்றன என்றும், அதனையே படையினர் அடக்கியுள்ளனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அநுரகுமார,

"கொழும்பு - காலிமுகத்திடலில் அன்றும் போராடியவர்கள் மக்கள்தான். இன்றும் போராடுபவர்கள் அதே மக்கள்தான். இந்நிலையில், அமைதி வழியில் போராடும் மக்களைக் கிளர்ச்சியாளர்கள் என்று பொய் கூறி அவர்கள் மீது ஆயுதப் படைகளைக் கொண்டு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாக்குதல் நடத்த உத்தரவிட்டமை மாபெரும் அராஜகம் ஆகும். இது போராடும் மக்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ரணில் வீட்டுக்குப் போ' என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கை. இதற்கு மதிப்பளித்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிப் பதவியிலிருந்து உடனடியாக விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும். இல்லையேல் ராஜபக்சக்கள் போல் அடுத்த மாதம் (ஓகஸ்ட்) 9 ஆம் திகதி மக்களால் அவர் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படுவார்" - என்றார்.

மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகியிருந்தார். ஜூன் 9ஆம் திகதி பஸில் ராஜபக்ச விலகியிருந்தார். ஜூலை 9ஆம் திகதி கொழும்பில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தால் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச தப்பியோடி கடந்த 14ஆம் திகதி பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post