இனிமேலும் இது கோட்டாவின் சொத்து அல்ல!! போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட அரச கட்டடங்கள் இன்று மீளக்கையளிப்பு - Yarl Voice இனிமேலும் இது கோட்டாவின் சொத்து அல்ல!! போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட அரச கட்டடங்கள் இன்று மீளக்கையளிப்பு - Yarl Voice

இனிமேலும் இது கோட்டாவின் சொத்து அல்ல!! போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட அரச கட்டடங்கள் இன்று மீளக்கையளிப்பு



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 9ஆம் திகதியன்று போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்த ஜனாதிபதி மாளிகை உட்பட அரச கட்டடங்கள் அனைத்தும் பாதுகாப்புப் படையினரிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டன. எனினும், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் - காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் அரசுக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அமைதியை ஏற்படுத்தி புதிய அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், கைப்பற்றப்பட்ட அரச கட்டடங்களை மீளக் கையளிக்குமாறு காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்துத் தம்மால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் மீள ஒப்படைப்பதற்குக் காலிமுகத்திடல் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் குழுவினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். 

இன்று காலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அவர்கள் அதற்கான இணக்கத்தை வெளியிட்டிருந்தனர். 

இந்நிலையில், தம்மால் கைப்பற்றப்பட்ட அரச கட்டடங்களை இன்று பிற்பகல் பாதுகாப்புப் படையினரிடம் மீளக் கையளித்துவிட்டு அங்கிருந்து போராட்டக் குழுவினர் வெளியேறியுள்ளனர். 

"மக்கள் வரிப்பணத்தால் இயங்கும் மக்கள் சொத்துக்களை மக்கள் எழுச்சியால் கைப்பற்றினோம். இது சரித்திரத்தில் மிக முக்கியமான நிகழ்வு. இதன் மூலம் மக்களுக்கு நலன் செய்யாத நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி மக்களால் விரட்டியடிக்கப்பட்டார் என்பதை உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்பதே எமது தேவையாக இருந்தது. அதை நிறைவேற்றிக் காட்டியுள்ளோம். எமது போராட்டத்தின் இலக்கு கோட்டாபய அரசை அடியோடு கவிழ்த்து மக்கள் அபிலாஷைகளை வென்றெடுக்கக் கூடிய - நாட்டுக்கு நலன் செய்யக் கூடிய ஆட்சியை உருவாக்குவதே தவிர அரச கட்டடங்களைப் பிடித்து அதனுள் வெற்றியைக் கொண்டாடுவது அல்ல. போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட அரச கட்டடங்களில் இருந்து போராட்டக் குழு வெளியேறியது போராட்டத்தின் இறுதிக் கட்டத்தைச் சரியாக நகர்த்திச் செல்வதற்கே ஆகும். இருந்தாலும் அரச மாளிகைகளுக்குள் இருக்கும் போராட்டப் பதாகைகள் நம் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வரையிலும் சரித்திர புகழ்பெற்ற போராட்டத்தை நினைவுகூரும் வகையிலும் அங்கேயே விட்டு வைத்துள்ளோம்" - என்று காலிமுகத்திடல் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களால் மீளக் கையளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையின் முன் வாசஸ்தலத்தில், "2022 ஜூலை 09ஆம் திகதி பொதுச்சொத்தாக்கப்பட்ட இக்கட்டடமானது 300 வருடங்கள் பழைமை வாய்ந்ததாகும். தற்சமயம் இது எமது அருஞ்சொத்தாகும். இனிமேலும் இது கோட்டாவின் சொத்து அல்ல என்பதனால் இதனைப் பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும்" - என்று எழுதப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post