திருடி விற்ற சைக்கிளை வாங்கிய இளைஞர் கைது! -சைக்கிளும் மீட்பு- - Yarl Voice திருடி விற்ற சைக்கிளை வாங்கிய இளைஞர் கைது! -சைக்கிளும் மீட்பு- - Yarl Voice

திருடி விற்ற சைக்கிளை வாங்கிய இளைஞர் கைது! -சைக்கிளும் மீட்பு-




பொன்னாலையைச் சேர்ந்த ஒருவரின் துவிச்சக்கரவண்டி திருட்டுப் போயிருந்த நிலையில் அது இன்று புதன்கிழமை மதியம் சங்கானையில் மீட்கப்பட்டது. அதை விற்பனைக்காக வைத்திருந்த  இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் துவிச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. குறித்த நபர் நாளை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மூளாய் வேரம் அக்கினி பைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற பொன்னாலை தெற்கைச் சேர்ந்த இராசையா துஜீபன் என்பவரின் துவிச்சக்கரவண்டி திருடப்பட்டது. 

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், குறித்த துவிச்சக்கரவண்டியை விற்பனை செய்வதற்காக சமூக வலைத்தளத்தில் (இக்மன்) விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதை பார்வையிட்ட வாகன உரிமையாளர் குறித்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அதை வாங்குவது போன்று விலைகளையும் தீர்மானித்து அவர்களுடன் உரையாடியதை தொடர்ந்து இன்று காலை சங்கானைக்கு வருமாறு அவர்கள் கூறியிருந்தனர். 

வாகன உரிமையாளரும் இன்னும் அவரது உறவினர்களும் சங்கானையில் சென்று காத்திருந்தனர்.

இது தொடர்பாக எனது கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. நானும் சங்கானைக்கு சென்று அவர்களுடன்  காத்திருந்தேன். 

முற்பகல் 11.20 மணியளவில் துவிச்சக்கரவண்டியை இருவர்  கொண்டுவந்தனர். சங்கானை பழைய மக்கள் வங்கிக்கு அருகாமையில் வைத்து அவர்கள் இருவரும் எம்மால் தடுத்து நிறுத்தப்பட்டு துவிச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டது. 

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது,             தாம் அராலியை சேர்ந்தவர்கள் எனவும் மூளாய் அக்கினி பைரவர் ஆலய இசை நிகழ்ச்சியின்போது இரவு 1.30 மணியளவில் ஒருவர் குறித்த துவிச்சக்கரவண்டியை 8000 ரூபாவுக்கு தமக்கு விற்பனை செய்தார் எனவும் அவர் யார் என தமக்கு தெரியாது எனவும் கூறினர். 

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் துவிச்சக்கரவண்டியை வாங்கிய பிரதான நபருக்கு கையில் விலங்கு மாட்டி அவரை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். 

நாளைய தினம் மல்லாகம் நீதிமன்றில் அவர் ஆஜ்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post