"முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தங்கியுள்ளமையால் உலகளாவிய நியாயாதிக்கம் என்ற கோட்பாட்டின் கீழ், நடவடிக்கை எடுப்பது இப்போது மிகவும் பொருத்தமானது. அவரது பதவி விலகல் நீதிக்கான புதிய சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது."
- இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு 5 தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக இணைந்து எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோர் இணைந்து இந்தக் கடிதத்தை கடந்த 9ஆம் திகதி அனுப்பிவைத்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில் மேலும் முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளதாவது:-
"ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் 2021ஆம் ஆண்டு மார்ச் மாத அறிக்கையின் பரிந்துரையின்படி, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைப்பதன் முக்கியத்துவத்தை, வட கொரியாவை போல் ஐ.நா. பாதுகாப்புச் சபை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்க மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
தமிழர் தாயகத்தில் அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தை நீக்குதல், சிங்கள - பௌத்த பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களில் இணைப்பதற்கு பிரதேச எல்லைகளை மீள் நிர்ணயம் செய்தல், தமிழ்ப் பிரதேசங்களை சிங்கள - பௌத்த பிரதேசங்களுடன் இணைப்பதைத் தடுத்தல், தமிழ்ப் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் நடைபெறும் சிங்கள - பௌத்த குடியேற்றங்கள் என்பனவற்றை நிறுத்துதல், நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு சர்வதேசக் கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பை நடத்தல் போன்ற கோரிக்கைகளை வலுவாகப் பரிசீலிக்கவேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் முன்னர் பரிந்துரைக்கப்பட்டபடி, கடுமையான சர்வதேச குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதிக்கும் உலகளாவிய நியாயாதிக்கம் என்ற கோட்பாட்டின் கீழ், இலங்கை அரச மற்றும் இராணுவ அதிகாரிகளை அவர்களது பிரதேசத்தில் கைது செய்து, குறித்த நாடுகளின் பிரதேசத்தில் இந்தக்குற்றங்கள் இழைக்கப் படவில்லை என்றாலும், விசாரணைக்கு உட்படுத்துமாறு உலகெங்கிலும் உள்ள அரசுகளைக் கேட்டுக்கொள்கிறோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தங்கியுள்ளமையால் இந்த நடவடிக்கை இப்போது மிகவும் பொருத்தமானது. அவரது பதவி விலகல் நீதிக்கான புதிய சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் இனி ஜனாதிபதியாக இல்லாததால், அவர் அரச தலைவருக்கான பாதுகாப்பை இழக்கின்றார்.
சுயாதீன அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்தும் மற்றும் குற்றமாக்கும் அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தம் கட்டுப்படுத்தல் சட்டங்களில் முக்கியமானது.
முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றமையால், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்குமாறு இலங்கையை நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகளில் சிரமங்கள் இருக்க முடியாது" - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment