சுயாதீன இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளையதினம் யாழ்ப்பாணத்தில்
இரத்ததான முகாமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரகாஷினுடைய நண்பர்களின் ஏற்பாட்டில் நாளை ஆகஸ்ட் 28ம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3.30 வரை
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் கலந்து கொண்டு இரத்ததான முகாமில் பங்கெடுக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுயாதீன இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷ் (26 வயது) 2021 செப்டம்பர் 2ம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஷ், சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார். அத்துடன் முகநூலில் உடனுக்கு உடன் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை பதிவேற்றி வருபவர்.
1995 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி யாழ். கொடிகாமம் – வௌ்ளாம்பொக்கட்டியில் பிறந்த ஞானப்பிரகாசம் பிரகாஷ், அல்லாரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை பயின்றார்.
9 வயதில் கால்கள் வலுவிழக்க சக்கர நாற்காலியில் இவரது உடல் முடங்கியது. உடல் நலம் ஒத்துழைக்காத நிலையில், தரம் 5-இல் பாடசாலை கல்வியை கைவிட்டு பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் ஒரு ஜனநாயக போராளியாக தம்மை சிறுகச் சிறுக செதுக்கத் தொடங்கினார்.
உரிமைக்காக போராடிய மலையக மக்களுக்காகவும் நீதி கோரி நிற்கும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்ற பிரகாஷ், குரலற்ற மக்களுக்காக நீதிக்கான வேள்வியில் தனது எழுத்துக்களை ஆகுதியாக்கினார்.
எழுத்தறிவை விஞ்சிய பட்டறிவால் குறுகிய காலத்திற்குள் செய்தி அறிக்கையிடலில் நிபுணத்துவம் பெற்ற ஞானப்பிரகாசம் பிரகாஷூக்கு சமூக ஊடகங்களில் மாத்திரமன்றி, பல முன்னணி பத்திரிகைகளில் இருந்தும் செய்தி வலைத்தளங்களில் இருந்தும் சந்தர்ப்பங்கள் தேடிச்சென்றன.
நோய்த் தாக்கத்தினால் தனது உடல் ஓய்ந்தபோதிலும், மன உறுதியுடன் கூடிய எழுத்தாற்றலினால் எம்மிடையே கம்பீரமாய் வலம் வந்த பிரகாஷையும் கொரோனாத் தொற்று விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment