போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு! - Yarl Voice போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு! - Yarl Voice

போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!



போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை யாழ்.போதனா வைத்தியசாலை சமூகம் யாழ்.மாவட்ட செயலரிடம் கையளித்துள்ளது. 

போதைப்பொருளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை போதனா வைத்தியசாலை சமூகத்தினால் விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆரம்பமான நடைபவனி  யாழ்.மாவட்ட செயலகத்திற்கு சென்று ,அங்கு மாவட்ட செயலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. 

குறித்த மகஜரில், 

யாழ் போதனா வைத்தியசாலை சமூகமாகிய நாம் இன்று போதைப் பொருள் விநியோகம் மற்றும் பாவனைக்கு எதிரான நடவடிக்கையை வலியுறுத்தி போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து தங்களது அலுவலகத்தில் முடிவுறும் வகையில் ஒரு விழிப்புணர்வு நடை  பயணப்  பிரசாரத்தினை மேற்கொண்டுள்ளோம். 

நாம் அறியக்கூடியது போதைப்பொருள் விநியோக வலையமைப்பு,  போதைப் பொருள் விநியோகம்,  இளம் சமுதாயத்தைப்  போதை பொருளுக்கு அடிமையாக்குதல்
போன்ற சமூக அழிப்பு  செயற்பாடுகள்  மிகப்பெரிய அளவில் இடையூறின்றி எமது பிராந்தியத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது.

 பாடசாலை மாணவர்கள் மற்றும் இளம் சந்ததியினரே  குறிவைக்கப் படுகின்றனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும், சிகிச்சை அளிக்கப்படும் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. இளைஞர் யுவதிகளின் வளமான  வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

 நாட்டின் பொருளாதாரம் சிதைக்கப்  படுகிறது. பொதுமக்களும் போதனா வைத்தியசாலை சமூகத்தினர் ஆகிய நாமும் போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மீதான கடும்  நடவடிக்கைகள்  எடுக்கப்படாமை  குறித்து ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைகின்றோம். இளம் சந்ததியினரையும் நாட்டினையும் காப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்துகின்றோம்.

1. போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முப்படைகளையும் உடனடியாக வலியுறுத்துதல்.

2.போதைப் பொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை வழங்குவோரை  பாதுகாப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல்.

3. போதைப்பொருள் சம்பந்தமான தகவல்களை தயக்கமின்றி
வழங்க அதிபர்கள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதலும்,  அவர்களைப் பாதுகாத்தலும்.

4.  போதைப் பொருள் பாவனைக்கு எதிரான மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து போலீசாருடன் இணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு  உதவியளித்தலும், ஊக்கப்படுத்துதலும்.

5.  போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்கு  உரிய கட்டமைப்புகளை உருவாக்குவதும், அதன்  தொடர்ச்சியான செயற்பாடுகளை உறுதிப்படுத்தலும்

ஆகிய மேற்குறிப்பிட்ட எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, தாமதிக்காது சகல தரப்பினரையும் உள்வாங்கி மிகப் பாரதூரமான போதைப் பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளியை கொண்டு வருவீர்கள் என திடமாக நம்புகின்றோம் என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post