"இலங்கைக்குப் போதும் அவகாசம்"! தீர்க்கமான முடிவு எடுக்க வலியுறுத்தி தமிழ்த் தரப்புக்கள் கூட்டாகக் காட்டமான கடிதம் - Yarl Voice "இலங்கைக்குப் போதும் அவகாசம்"! தீர்க்கமான முடிவு எடுக்க வலியுறுத்தி தமிழ்த் தரப்புக்கள் கூட்டாகக் காட்டமான கடிதம் - Yarl Voice

"இலங்கைக்குப் போதும் அவகாசம்"! தீர்க்கமான முடிவு எடுக்க வலியுறுத்தி தமிழ்த் தரப்புக்கள் கூட்டாகக் காட்டமான கடிதம்"இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கிக் கொண்டிருக்காது, ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்த வேண்டும். இதனை சீனா தனது 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்கும் என்பது நொண்டிச்சாட்டு."

- இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைக்கவுள்ள இணை அனுசரணை நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்குத் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைந்து கடிதம் அனுப்பியுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழர் தரப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் பிரதானமாக, சர்வதேச நீதிமன்றத்துக்கு இலங்கையைப் பாரப்படுத்த ஐ.நா. பாதுகாப்புச் சபையை தூண்டுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்த தவறி உள்ளமையால், மேலும் கால அவகாசத்தை வழங்குவது அர்த்தமற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையில் சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  சர்வதேச நீதிமன்றத்துக்கு இலங்கையைப் பாரப்படுத்துவதை தடுக்கும் என்ற  வாதம்  குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியா? என்று உலகின் பல தரப்பினரும் சந்தேகத்தை எழுப்புவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கள் ஆதாரமற்றவை என்றும், இலங்கையை விட சீனாவோடு மிக நெருக்கமாக  இருந்த சூடானை ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஊடாக  மனித உரிமை மீறல்களுக்காக  சர்வதேச நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்திய பொழுது அதற்கு எதிராக எந்த நாடும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்பதும், அதேபோன்று வடகொரியாவை சர்வதேச நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதையும் இந்தக் கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியக் குற்றங்களுக்காக நீண்டகாலமாக  தமிழ் மக்கள் கோரி நிற்கும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் சபை மேற்குறிப்பிட்ட உண்மைகளின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையைப் பாரப்படுத்துவதற்கு பாதுகாப்புச் சபையைத் தூண்டுவதற்கான பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் எனவும் இந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் (தேசியப்பட்டியல்), வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோதராதலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா, வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், யாழ். பல்கழைலக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அ.விஜயகுமார், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், நல்லை ஆதீன குரு முதல்வர், திருகோணமலை தென்கயிலை ஆதீன முதல்வர், திருகோணமலை மறை மாவட்ட ஆயர், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வேலன் சுவாமிகள், யாழ். மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் அ.அன்னராசா, வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி திருமதி வை.கனகரஞ்சினி, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அமைப்பாளர் மு.கோமகன், வவுனியா மாவட்ட சிறுவர் அபிவிருத்தி அமைப்பு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதுடன் யாழ். மறை மாவட்ட ஆயர் இந்தக் கடிதத்துக்கு தனது இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post