27 வருடமாக சிறையிலுள்ள சகோதரனை விடுவிக்க வேண்டும்..! கண்ணீர் மல்க சகோதரி கோரிக்கை - Yarl Voice 27 வருடமாக சிறையிலுள்ள சகோதரனை விடுவிக்க வேண்டும்..! கண்ணீர் மல்க சகோதரி கோரிக்கை - Yarl Voice

27 வருடமாக சிறையிலுள்ள சகோதரனை விடுவிக்க வேண்டும்..! கண்ணீர் மல்க சகோதரி கோரிக்கை



இருபத்தேழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக சிறையில் இருக்கின்ற எனது சகோதரனை விடுவிக்க வேண்டும் என அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் சகோதரி வாஹினி கோரிக்கை விடுத்ததுடன் சிறையில் அரசியல்கைதி என எவரும் இருக்க கூடாதென உருக்கமான கோரிக்கை விடுத்தார். 


யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.



மேலும் தெரிவிக்கையில், எங்கள் அண்ணாவும் நானும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நீண்ட காலமாக விடுதலை விடுதலை எனக்கூறி அந்த விடுதலை கிடைக்கவில்லை. 


எதிர்வரும் பொங்கலுக்குள் அண்ணா வருவார் என்று நம்புகிறோம். அம்மா அப்பா இல்லாத நேரத்தில் எங்களுடன் இணைந்து அண்ணா இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அண்ணா 18 வயதில் சிறைசென்று 46 வயதாகிவிட்டது. அண்ணாவின் விடுதலையை எதிர்பார்த்து அம்மா உயிரிழந்துவிட்டார். 


அண்ணாவின் வாழ்க்கை சிறையில் முடிந்துவிடாமல் அவரை பொது மன்னிப்பு விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனைய அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்பபையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.


அதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில்,  அண்மையில் விடுதலையான தமிழ் அரசியல் கைதி வேலாயுதம் வரதராஜன் கருத்து தெரிவிக்கையில், 23 வருட சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை பெற்று வந்துள்ளேன். 


எனது குடும்பத்துடன் இணைந்து மகிழ்வாக இருக்கின்றேன். அனைத்து தமிழரசியல் கைதிகளும் விடுவிக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. எமது விடுதலையை சாத்தியப்படுத்திய ஜனாதிபதிக்கும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கும் மிக்க நன்றிகளை தெரியப்படுத்த விரும்புகிறேன். 


எமது விடுதலைக்காக இதயசுத்தியுடன் செயற்பட்ட ஒவ்வொரு அமைப்புகளுக்கும் இவ்விடத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இறுதி அரசியல் கைதி விடுதலை செய்யும் வரை இந்த விடயத்தை தொடர்ந்து முன்னெடுத்து அவர்கள் குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்வாக வாழ வழிசெய்ய வேண்டும். நீண்ட காலம் சிறையிலிருந்து வரும் கைதிகள் மிகவும் பின் தங்கிய பூச்சிய நிலையிலேயே இருக்கின்றார்கள். 


அதனால் நமது சமூகத்தில் அக்கறை கொண்ட அமைப்புகள் விடுதலைப் பெற்று வந்தவர்கள் சமூகத்தில் வாழ்வை ஆரம்பித்து முன் கொண்டு செல்வதற்கு உதவி செய்ய வேண்டும் என கோரினார்.அத்துடன், அண்மையில் விடுவிக்கப்பட 8 அரசியல் கைதிகளுக்கும் அமைப்பொன்றினால் உதவிதொகை வழங்கப்பட்டது. அவர்களுக்கு இந்நேரம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.


அதேவேளை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன் கருத்து தெரிவிக்கையில்,


சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் 33 பேர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post