என் சாபத்திலிருந்து ராஜபக்‌சக்கள் தப்ப முடியாது! - சந்தியா எக்னெலிகொட தெரிவிப்பு - Yarl Voice என் சாபத்திலிருந்து ராஜபக்‌சக்கள் தப்ப முடியாது! - சந்தியா எக்னெலிகொட தெரிவிப்பு - Yarl Voice

என் சாபத்திலிருந்து ராஜபக்‌சக்கள் தப்ப முடியாது! - சந்தியா எக்னெலிகொட தெரிவிப்பு



"பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி கிடைக்கும் வரை ராஜபக்‌சக்கள் எனது சாபத்திலிருந்து விடுபட முடியாது."

- இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

2022 இல் உலகின் தலைசிறந்த 100 பெண்களில் ஒருவராக பி.பி.சியால் தெரிவு செய்யப்பட்டமை குறித்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"2022 ஜனவரி 25 இல் எனது கணவர் காணாமல்போய் 12 வருடங்களாகிவிட்டன. பிரகீத்தின் தலைவிதிக்குக் காரணமான ராஜபக்‌சக்களுக்குக் கடும் சாபத்தை வழங்குவதற்காக நான் எனது தலைமுடியை அகற்றி கறுப்பு ஆடை அணிந்தேன்.

அது மிகவும் கடுமையான சாபம். எனது கணவருக்கு நீதி கிடைக்கும் வரை எனது சாபம் நீடிக்கும்.

2010 ஜனவரி 25 ஆம் திகதி எனது கணவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அன்று நான் முதன்முதலில் கமரா முன்னால் தோன்றினேன். அதன் பின்னர் எனது கணவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக நான் பல தெரிவிக்க முடியாத நெருக்கடிகளின் மத்தியில் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளேன்.

அவர்கள் பிரகீத்தை என்னிடமிருந்து எடுத்து 4 ஆயிரம் 712 நாள்கள் ஆகிவிட்டன. நீதிக்கான எனது தேடல் இன்னமும் ஓயவில்லை. இந்தப் பயணத்தின் போது பல நல்ல இதயங்கள் எனக்கு உதவியுள்ளன. சிலர் எனக்கு நீதி கிடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 

2010 ஜனவரி 25 ஆம் திகதி நான் பொலிஸ் நிலையத்திலிருந்த வேளை தற்போதைய ஜனாதிபதி என்னைத்  தொடர்புகொண்டு நாங்கள் பிரகீத்தை கண்டுபிடிக்க உதவுவோம், கவலைப்பட வேண்டாம் என்றார். இன்று அவர் ஜனாதிபதியாகியுள்ளார். சாட்சியங்கள் மீதான அரசியல் அழுத்தத்தை நீக்கியதால் அவரால் பிரகீத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏனையவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஜனாதிபதி உதவ வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post