இலங்கை வங்கி விருது வழங்கி வைப்பு - Yarl Voice இலங்கை வங்கி விருது வழங்கி வைப்பு - Yarl Voice

இலங்கை வங்கி விருது வழங்கி வைப்புயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தினால் வழங்கப்படும் தொழில் நிருவாகமாணி, வணிகமாணி ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளிலும் முதனிலை பெறும் மாணவர்களுக்கு வருடாந்தப் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை வங்கியினால் “இலங்கை வங்கி விருது”  வழங்கப்படவுள்ளது.
 
இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு, இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்த உடன்படிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவும், இலங்கை வங்கியின் சார்பில் அதன் வட மாகாண உதவிப் பொது முகாமையாளர் வி. சிவானந்தனும் ஒப்பமிட்டனர். விருதுக்கான வைப்புச் சான்றிதழ் பல்கலைக்கழக நிதியாளர் கே. சுரேஸ்குமாரிடம் கையளிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்களும், இலங்கை வங்கியின் பிராந்திய உதவி முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள் மற்றும் வங்கியியலாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தில் தொழில் நிருவாகமாணி, வணிகமாணி ஆகிய பட்டங்களைப் பெறும் மாணவர்களில் முதனிலை பெறும் மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப் பதக்கத்தையும், சான்றிதழையும் வழங்குவதற்கென இலங்கை வங்கியினால் ரூபா பத்து இலட்சம் இலங்கை வங்கி திருநெல்வேலி கிளையில்  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெயரில்  வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து ஒவ்வொரு வருடமும் இலங்கை வங்கி விருதுக்கான தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படவுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post