அரசமைப்பிலுள்ள அதிகாரப் பரவலாக்கல் 7 நாள்களுக்குள் நடைமுறையாகவேண்டும் - தவறினால் அரசுடனான பேச்சு நிறுத்தம் என தமிழ்க் கட்சிகள் முடிவு - Yarl Voice அரசமைப்பிலுள்ள அதிகாரப் பரவலாக்கல் 7 நாள்களுக்குள் நடைமுறையாகவேண்டும் - தவறினால் அரசுடனான பேச்சு நிறுத்தம் என தமிழ்க் கட்சிகள் முடிவு - Yarl Voice

அரசமைப்பிலுள்ள அதிகாரப் பரவலாக்கல் 7 நாள்களுக்குள் நடைமுறையாகவேண்டும் - தவறினால் அரசுடனான பேச்சு நிறுத்தம் என தமிழ்க் கட்சிகள் முடிவு"அரசமைப்பின் ஊடாகவும், சட்டங்களின் ஏற்பாடுகளாகவும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதுள்ள அதிகாரப் பரவலாக்க விடயங்கள் அனைத்தையும் 7 நாள்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அரசுடனான பேச்சிலிருந்து வெளியேறுவோம்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்றைய சர்வகட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கவுள்ளன.

அரசுடனான இன்றைய சர்வகட்சிப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுப்பது என்பது தொடர்பில் நேற்று மாலை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூடிப் பேச்சு நடத்தின.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ரெலோ சார்பில் கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம், புளொட் சார்பில் கட்சித் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் ஆர். இராகவன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

காணி விடுவிப்புத் தொடர்பில் அரசுடனான சந்திப்பில் ஏற்கனவே அழுத்தமாகத் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை எந்தவொரு காணிகளும் விடுவிக்கப்படவில்லை. அவை விடுவிக்கப்படுவதற்கான ஏதுநிலைகளும் தெரியவில்லை. அதற்கு மாறாக புதிது புதிதாகக் காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளே  நடைபெறுகின்றன. ஆயுதப் படைகளுக்காக இருக்கட்டும், ஏனைய திணைக்களங்களுக்கானதாக இருக்கலாம் எந்தவொரு காணி சுவீகரிப்பும் நடைபெறாமல் இருப்பதற்கான உத்தரவு உடனடியாகப் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதையே செய்ய முடியாவிட்டால் பேச்சுக்களைத் தொடர்வதில் அர்த்தமில்லை என்பதை அரசுக்குத்  தெரியப்படுத்தவேண்டும்.  

அரசமைப்பின் ஊடாகவும், சட்டங்களின் ஏற்பாடுகளாகவும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதுள்ள அதிகாரப் பரவலாக்க விடயங்கள் அனைத்தையும் 7 நாள்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் ஊடாக எந்தவொரு தாமதமும் - தடங்கலும் இன்றி செய்ய முடியும் என்பதால் ஒரு வார கால அவகாசம் போதுமானது என்று அரசுக்கு கூறவேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு அரசு தயாரா என்பதையும், எந்த அடிப்படையில் அந்தத் தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போகின்றார்கள் என்பதையும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை அரசு உதாசீனம் செய்யுமாக இருந்தால் தொடர்ந்தும் பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்பதையும் இன்றைய கூட்டத்தில் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நேற்று முடிவெடுக்கப்பட்டது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post