தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமெங்கும் போராட்டம்! - Yarl Voice தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமெங்கும் போராட்டம்! - Yarl Voice

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமெங்கும் போராட்டம்!



 தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமெங்கும் “நீதியின் ஓலம்” எனும் போராட்டத்தின் வாயிலாக
கையொப்பம் சேகரிக்கும் முயற்சி நடைபெறவுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே 
தாயகச் செயலணி அமைப்பினர் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக, யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி என்பது, ஈழத் தமிழர்கள்மீது இலங்கை அரச பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனிதப் பேரவலத்தின் சிறு சாட்சியம் மட்டுமே. குறிப்பாக, 1996 ஆம் ஆண்டில் இலங்கை அரசுப் படையினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, 16 வயதுடைய பாடசாலை மாணவியின் வழக்கின் மூலமாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இப்படுகொலைக்கு முன்னதாக 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு காலத்திலும் அதன் பின்னரிலும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானோர் மிகக் கொடூரமாக படுகொலை செய்து புதைக்கப்பட்டனர் என்பதனை நிரூபிக்கும் வகையில், கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கை அரசுப் படைச் சிப்பாயின் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில், 1999 ஆம் ஆண்டில் 15 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன.

ஆயினும், பின்னர் ஆட்சிக்கு வந்த இலங்கை அரசியல் இயந்திரங்கள் அவற்றை முழுமையாக விசாரணை செய்யாமல், மூடி மறைத்து வந்தன. அண்மையில், அப்பகுதியில் கட்டுமான வேலைக்காக நடைபெற்ற அகழ்வுப் பணியின் போது மனித எலும்புக்கூடுகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இவ்விடயத்தை மூடி மறைக்கும் முயற்சிகள் அரசுத் தரப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் மேற்கொண்ட தொடர்ச்சியான அழுத்தங்களின் மூலமே இதுவரை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதைப் பற்றிய கவனயீர்ப்பு நிகழ்வு, அணையாவிளக்கு போராட்டமாக தாயக மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக, வரும் 23.08.2025 சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்கள் தமிழர் தாயகமெங்கும் “நீதியின் ஓலம்” எனும் போராட்டத்தின் வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையொப்பப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கையொப்பப் போராட்டத்தின் கோரிக்கைகள்:
1. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும்.
2. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும்.
3. தமிழர்கள்மீது இனப்படுகொலை செய்த படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போல அனைத்து நாடுகளும் பயணத் தடையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
4. தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
5. இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
6. “பயங்கரவாதத் தடைகள்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்குமுறைகளை நிறுத்தவும், நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும் சர்வதேச அழுத்தம் தேவை.
7. கடந்த 76 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் இனவழிப்பை நிறுத்தி, ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும்.
8. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
9. தமிழ்மக்களுக்கு வழங்கப்படும் தேச அதிகாரங்கள் எந்தக் காலத்திலும் மீளப்பெற முடியாத வகையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை சர்வதேசமும் ஐ.நா.வும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி, “நீதியின் ஓலம்” என்ற கையொப்பப் போராட்டம் 23.08.2025 சனிக்கிழமை காலை 10 மணி முதல் செம்மணியில் ஆரம்பித்து தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.

இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புகளும், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள், மத அமைப்புகள், வர்த்தகர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச்சங்கங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பேராதரவும் ஒத்துழைப்பும் அவசியம் - என்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post