மாலைதீவில் பெரும் குழப்பம் - Yarl Voice மாலைதீவில் பெரும் குழப்பம் - Yarl Voice

மாலைதீவில் பெரும் குழப்பம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்குமாறு மலைதீவு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்த நாட்டு நாடாளுமன்றத்தை அரசு காலவரையின்று முடக்கியுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்கவும் தயக்கம் காட்டி வருகிறது..

இதுகுறித்து தலைநகர் மாலியில் நாடாளுமன்ற அதிகாரிகள் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலத்தீவில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது பேரை விடுவிக்குமாறு அந்த நாட்டு அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அந்த 9 பேர் மீதும் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டதாக அந்த நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தலைமையிலான மலைதீவு முன்னேற்றக் கட்சியிலிருந்து விலகிய 12 எம்.பி.க்களின் தகுதி நீக்கம் செல்லாது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து.

இதையடுத்து, அந்த 12 பேருக்கும் மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டிய சூழல் நாடாளுமன்றத்துக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த 12 பேருக்கும் எம்.பி. பதவி வழங்கப்பட்டால், அவர்களுடன் இணைந்து எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலம் பெற முடியும் எனவும், அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது.

இத்தகையச் சூழலில்தான், நாடாளுமன்றத்தை காலவரையின்றி முடக்குவதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.ஈ.

இதுவும், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அதிபர் யாமீன் மேற்கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அரசியல் கைதிகளை விடுவிக்கத் தயக்கம்: இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க அப்துல்லா யாமீனின் அரசு தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.ஈ.

0/Post a Comment/Comments

Previous Post Next Post