வருமா? வராதா? பருத்தித்துறை துறைமுகம் - Yarl Voice வருமா? வராதா? பருத்தித்துறை துறைமுகம் - Yarl Voice

வருமா? வராதா? பருத்தித்துறை துறைமுகம்


- எஸ்.நிதர்ஷன்-

நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளின் போது அது தொடர்பான சாதகமான மற்றும் பாதகமான விளைவுகள் குறித்தான கருத்தாடல்கள் அல்லது கருத்து முரண்கள் தோன்றுவது இயல்பானவை. அது போன்று தான் பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தியிலும் அதனுடைய சாதக பாதக தன்மை குறித்து நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் மக்கள் மத்தியிலே இருந்து கொண்டிருக்கின்றன.

ஒரு தரப்பினர் இந்த பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தியால் அந்தப் பகுதியிலே உள்ள பாடசாலை மாணவர்கள், கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றொரு அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்ற அதே வேளையிலே மற்றொரு பகுதியினர் இந்தத் துறைமுக பகுதி அபிவிருத்தியால் அந்த துறைமுகப் பகுதி சார்ந்த மக்கள் மட்டுமன்றி ஒட்டு மொத்தமாக முழுநாடும் நன்மை பெறும் என்கின்ற கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.

ஏனெனில் மக்கள் மத்தியிலே இந்த அபிவிருத்தியால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பான சந்தேகம் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த மக்களினுடைய சந்தேகங்களைப் போக்குகின்ற வகையிலான செயற்திட்டங்கள் அல்லது உருப்படியான வேலைத்திட்டங்கள் அல்லது விழிப்புணர்வுச் செயற்திட்டங்களை அரசு முன்னெடுக்கத் தவறியதே இந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான அச்சத்தை மக்கள் கொண்டிருப்பதற்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இருந்து வருவதை அந்தப் பகுதி மக்களிடையே பேசுகின்ற போது அறிய முடிகிறது.

ஆக மொத்த்திலே அபிவிருத்தி திட்டமொன்று முன்னெடுக்கின்ற போது அந்தப் பகுதிகளிலே இருக்கின்ற மக்கள் இதிலே தெளிவு பெற வேண்டும். அந்த மக்களுக்கு தெளிவூட்டப்பட வேண்டும். அவ்வாறு தெளிவூட்டப்படாத பட்சத்தில் இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும். ஆகையினால் இந்த அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது அது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது.

இந்த துறைமுகப் புனரமைப்புபணி அபிவிருத்திகளை முன்னைய அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்ற போதும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதிலே இந்த அரசாங்கமும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இனிமேலாவது இந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பான சாதகங்கள் குறித்து மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை வழங்க வேண்டும். இந்த அபிவிருத்தியால் மக்கள் எந்தவகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்கின்ற நம்பிக்கையை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற போது இந்த அபிவிருத்தியின் பயன்பாட்டை உணர்ந்து அதனை மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு சூழல் உருவாகும்.

குறிப்பாக வுடக்கில் பாரிய துறைiமுகமாக அமைக்கப்படும் இந்த பருத்தித்துறை துறைமுகம் குறித்தான ஆதரவும், எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புக்களுமே இதன் அபிவிருத்தி தொடர்பில் இன்றைய கேள்வியாக பலருக்கும் இருக்கின்றது. இந்த துறைமுக அபிவிருத்தி ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது முதல் இன்றுவரை அது குறித்தான பேச்சுக்களும், உறுதிமொழிகளும,; ஆதரவுகளும், எதிர்ப்புக்களுமென தொடர்ந்தும் ஒரு குழப்பமான நிலைமைகளே நீடித்து வருகின்றது.

முன்னை அரசின் ஆட்சிக் காலத்தில் 'மைத்திரி ஆட்சி நிலையான நாடு' 'பேண்தகு மீன்படி கைத்தொழில் துறையின் ஊடாக மீன்பிடி துறையில் தெற்காசிய வலயத்தில் முன்னோடியாகத் திகழ்தல்;' எனும் எதிர்கால நோக்கத்திற்கமைய வடக்கு மீன்பிடி துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் இத் துறைமுக நிர்மாணப் பணிகள் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபா சிறிசேனாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்துறைமுகப் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கின்ற போது அந்தப் பிரதேசத்திலுள்ள பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. குறி;ப்பாக துறைமுகத்திற்கு மிக அருகில் இருக்கும் பாடசாலையான பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. அதாவது இந்த துறைமுகம் பாடசாலைக்கு அருகில் அமைவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுமென்றும் அந்தப் பாதிப்புக்கள் தொடர்பிலும் பல தரப்பினர்களிடமும் சுட்டிக்காட்டியிருந்தது.

அதே நேரத்தில் துறைமுகம் அமையவுள்ள பிரதேசமான பருத்தித்துறை கொட்டடி மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக தமது வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படுமெனவும் அச்சத்தையும் கவலையையும் வெளியிட்டிருந்தனர். ஆயினும் இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் பல பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை இணைத்து பாரிய போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு துறைமுகப் பணிகள் ஆரம்பிப்பதில் கடும் எதிர்ப்புக்களும் அதே நேரம் ஆதரவும் இருந்த நிலைமையில் அங்கிருக்கின்ற எதிர்ப்புக்களை அல்லது அங்குள்ள மக்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை அல்லது அவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து இத்துறைமுக புனரமைப்புப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி சுமூகமான நிலைமையை ஏற்படுத்தும் வகையில் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய அந்தக் குழுவும் பல தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி ஒரு சுமூகமான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அதாவது குறித்த பாடசாலைக்கும் துறைமுகத்திற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியில் கடல்சார் தொழில்நுட்ப பூங்காவை அமைத்து அதனைக் கல்வித் தேவைக்கு கையளிப்பதென்றும் பாடசாலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அதே நேரத்தில் அப்பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில் துறைமுகப் பணிகளை மேற்கொள்வதென்றும் தீரமானிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஒரு சுமூகமான நிலைமை ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்து புனர்நிர்மான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஏற்கனவே பல்வேறு எதிர்ப்புக்கள் எதிர்பார்ப்புக்கள் சர்ச்சகைள் என ஏற்பட்டிருந்த இத் துறைமுகப் பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாத நிலைமையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னராக அதன் பணிகள் தடைப்பட்டுள்ளதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னராக பதவிக்கு வந்துள்ள புதிய அரசின் கடற்தொழில் அமைச்சராக வந்திருக்கின்ற ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்த துறைமுகத்தை அமைப்பதில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொண்டு துறைமுகத்தை நிச்சயம் தான் அமைத்தே தீருவேன் என்றும் கூறியிருக்கின்றார்.

இதற்மைகய துறைமுகப் புனரமைப்பு நடவடிக்கைளை முன்னெடுக்கப் போவதாகவும் அமைச்சர் கூறியிருந்த போதிலும் அதனை அமைப்பதில் அல்லது அத் துறைமுகப் பணிகளை முன்னெடுப்பதில் தொடர்ந்தும் சிக்கல்கள் அல்லது சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

ஆகவே இவற்றை நிவர்த்தி செய்து கொண்டு குறிப்பாக அந்தப் பாடசாலைச் சமூகமும் அந்தப் பிரதேச மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாதவாறு துறைமுகத்தை புனரமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றே பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றதையும் பார்;க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆகையினால் அதற்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமானதாக இருக்கின்றது.

ஆக மொத்தத்திலே அபிவிருத்தி என்பது யாருக்காக என்பதை அதிகார வர்க்கக்ங்கள் முதலில் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும். உண்மையில் இந்த அபிவிருத்தி என்பது மக்களுக்கானது. ஆகையினால் மக்களின் ஆதரவுடனே இப்படியான அபிவிருத்திச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த அபிவிருத்திகளுக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான செயற்திட்டங்கள் முதலிலே முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதனை விடுத்து மக்களைப் பகைத்துக் கொண்டு அவர்களுக்காகச் செய்யப்படும் அபிவிருத்தியால் ஒருபோதும் எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டு அரசியல்வாதிகள் செயற்படத் தொடங்கினாலே இந்த அபிவிருத்தி தொடர்பான எதிர்ப்பில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் இயல்பாகவே நீங்கிவிடக் கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.

குறிப்பாக இந்த பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி எடுத்துக் கொண்டால் அரசியல்வாதிகள் மட்டத்திலே குறிப்பாக வடக்கிலே ஆதிக்கம் செலுத்துகின்ற அல்லது மக்கள் மட்டத்திலே செல்வாக்கு பெற்றிருக்கின்ற பல்வேறுபட்ட கட்சிகளும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவான போக்கினைக் கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில் அரச நிர்வாக மட்டத்திலும் இதற்கு ஆதரவான கருத்தக்களே வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் இந்தத் திட்டம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயற்படுத்தி அதனை மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டமாக மாற்றுவதற்கு அரசுகளால் உரிய செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்பதே இதில் பிரதான கருப்பொருளாக இருக்கின்றது.

அதே போன்று இந்த அபிவிருத்தி திட்டத்தை பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். ஒலி மாசு காற்று மாசு என்பன ஏற்படும், வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற அச்சம் அந்தப் பகுதியிலே இருக்கின்ற மக்கள் மத்தியில் இருக்கின்ற அச்சமென்பதை பரவலாக அறிய முடிகிறது.

இந்த அச்சத்தைப் போக்குவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் என்ன. இவ்வாறான அச்சுறுத்தல்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்ன. எவ்வாறு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படப் போகின்றதென்பதான தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மக்களுடன் நடாத்துவதன் மூலம் இந்தச் செயற்திட்டத்தை தொடர்ச்சியாக சிறப்பானதாக விரைவாக முன்னெடுக்க முடியும் என்பதே யதார்த்தமான நிலைப்பாடாக இருக்கிறது.

                                                                                                             - எஸ்.நிதர்ஷன்-


0/Post a Comment/Comments

Previous Post Next Post