புதிய அரசின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது..
சிறிலங்கா தீவு என்பது முற்று முழுதாக சிங்கள பௌத்த நாடு என்பது தான் புதிய அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது. அந்தக் கொள்கையை அவர்கள் மிகத் தெளிவாகவும் அதே நேரம் வெளிப்படையாகவும் சொல்லியும் இருக்கின்றனர். அவர்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள் ஊடாகவும் தெளிவாக அவர்கள் காட்டவும் இருக்கின்றனர்.
ஐனாதிபதி கோட்டாபாய ராஐபக்ச பாராளுமுன்றத்தில் செய்த முதலாவது கன்னிப் பேச்சில் தன்னுடைய தேர்தல் வெற்றிக்கு சிங்கள பௌத்தர்கள் மட்டும் தான் காரணம் என்று சொல்லி பெருமைப்பட்டதும் கூட அதன் தொடர்ச்சி தான். அவர்களது அந்தக் கொள்கையின் மிக முக்கியமான ஒரு அங்கமாகத் தான் அதனையும் பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு எனும் விடயத்தில் எதனைப் பற்றியும் அவர் சொல்லவில்லை. அதே நேரத்தில் அபிவிருத்தி என்ற விடயத்தில் பலவற்றைச் செய்வதாக சொல்லியுள்ளார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இங்கு அவர் அபிவிருத்தியை செய்யத் தான் போகின்றார். ஆனால் அந்த அபிவிருத்தியை எந்தக் கோணத்தில் செய்யப் போகின்றார் என்பதே மிக முக்கியமானது.
அதாவது கடந்த பல வருடங்களாக போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக எங்களது பிரதேசங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் எங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கள் மக்கள் பொருளாதார ரீதியாக முன்னிலையில் தான் உள்ளனர். இவ்வாறான நிலைமையில் தான் அவர்களுடைய அபிவிருத்திகளும் பொருளாதார முன்னேற்ற செயற்பாடுகளும் நடக்கப் போகின்றன.
அப்படிப்பட்ட இடத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் தென்னிலங்கையில் இருக்கக் கூடிய சிங்கள மக்கள் இங்கு தமிழ் மக்களோடு போட்டி போடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் மக்கள் அந்தப் போட்டியில் நின்று பிடிக்க முடியாத ஒரு நிலைமையை உருவாக்கி சிங்கள மக்களின் கைகளுக்கு வடகிழக்கின் பொருளாதாரத்தைக் கொண்டு போவது தான் அவர்களுடை மிகத் தெளிவான நோக்கம்.
ஆகவே இனியும் வந்து முன்னர் போன்று அரசாங்கம் நேரடியாகவே செய்கிற வேலைகளை அல்லது வெளிப்படையாகவே இனவாதப் போக்கில் செய்கிறதை விட்டு இப்படிப்பட்ட மறைமுகமாக பொருளாதார அரசியலைப் பயன்படுத்தி அந்தச் சிங்களக் குடியேற்றங்களை அல்லது சிங்கள மக்கள் தாங்களாக தொழிலுக்காகவும் வேறு விடயங்களுக்காகவும் இங்கு வந்து பொருளாதார ரீதியாகவும் வேரூன்றி குடியேறுகிற ஒரு நிலைமையைத் தான் உருவாக்க இருக்கின்றனர்.
இது தான் இன்றைய யதார்த்தம். இதற்கு எதிராக நேர்மையான உறுதியான தலைமைத்தும் அவசியம். அதாவது இந்த பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் வரப்போகிற சிங்கள மயமாக்கலை எதிர்த்து நிற்கக் கூடிய புலம் பெயர்ந்த தமிழ் மக்களுடைய பொருளாதாரப் பலத்தையும் சரியாகப் பயன்படுத்தி ஒரு மாற்று வேலைத் திட்டம் ஊடாக நாங்கள் தமிழர் தாயகத்தை தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தைப் பலப்படுத்தி அதை தொடர்ந்தும் எங்களுடைய மக்களோடு வைத்திருக்கக் கூடிய ஒரு வேலைத் திட்டத்தை வகுக்கக் கூடிய ஒரு தரப்பை வரப்போகின்ற தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த மோசமான நிகழ்ச்சி நிரலுக்கு முழுமையாக அரசாங்கத்தோடு சேர்ந்து ஈடுபடப் போறதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவிதமான தயக்ககமும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆரம்பத்தில் இருந்து தமிழ் அரசியலில் இருந்து தமிழ் தேசிய நீக்கத்தைச் செய்வதற்கு இணங்கியிருக்கிற தரப்பாகவே செயற்பட்டு வருகின்றனர்.
ஆகவே இந்த ஆபத்துக்களை உணர்ந்து அல்லது விளங்கிக் கொண்டு வரப்போகின்ற காலப்பகுதியில் எங்கட மக்கள் புதிய தலைமைத்துவத்தை அதுவும் ஒரு நேர்மையான கொள்கையில் தெளிவான உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட தெளிவான பார்வையைக் கொண்ட எதிர்காலம் சம்மந்தமாக தெளிவான ஒரு வியூகத்தை வகுக்கக் கூடிய ஒரு இளம் தலைமைத்துவமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது தான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது என்றார்.
Post a Comment