யாழில் 7 பேருக்கான தேர்தலில் 19 கட்சிகள், 14 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 330 பேர் களத்தில் - Yarl Voice யாழில் 7 பேருக்கான தேர்தலில் 19 கட்சிகள், 14 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 330 பேர் களத்தில் - Yarl Voice

யாழில் 7 பேருக்கான தேர்தலில் 19 கட்சிகள், 14 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 330 பேர் களத்தில்

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தில் யாழ்.மாவட்டத்தில் உள்ள 7 ஆசனங்களுக்காக 330 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுவதாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மகேசன் தெரிவித்தார்.

அங்கிகரிக்கப்பட்ட 19 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 330 வேட்பாளர்களே தேர்தல் களத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை நண்பகலுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த பின்னர் யாழ்.மாவட்டச் செயலாகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் காலம் இன்றுடன் (நேற்று) முடிவடைந்தது.
இந்நிலையில் இத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 19 அரசியல் கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களுக்களுமாக மொத்தமாக 36 வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டிருந்தன.

கிடைக்கப் பெற்ற வேட்பு மனுக்களின் மீது 24 ஆட்சேபனைகள் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் ஆட்சேபனைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக கையளிக்கப்பட்ட 19 வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

குறிப்பாக இலங்கை தமிழரசு கட்சி (தமிழ் தேசிய கூட்டமைப்பு), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி), தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜக்கிய தேசிய கட்சி , ஸ்ரீலங்கா சுதுந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புதிய ஜனநாயக முன்னணி, தேசிய மக்கள் சக்தி, ஜனசெத பெரமுண, சிங்களதீப ஜனாதிக பெரமுண, சோசலிச சமத்துவக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஜக்கிய மக்கள் சக்தி, முன்னிலை சோசலிசக் கட்சி, ஜக்கிய சேசலிசக் கட்சி, ஈழரவ் ஜனநாயக முன்னணி, எங்கள் மக்கள் சக்தி கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இருப்பினும் 17 சுயேட்சைக்குழுக்களில் 14 சுயேட்சைக்குழுக்களின் வேட்புமனுக்களே ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

குறிப்பாக ஆழ்வார்ப்பிள்ளை குருகலன், பழனி குனனேஸ்வரன், சுந்தரலிங்கம் செல்வகுமார், சுதர்சிங் விஜக்காந், சந்திரகுமார் முருகேசு, அபீத்த சபுமல் சேனநாயக்க, லெட்சுமன் பாரதிதாசன், ஜங்கரநேரன் பொன்னுத்துரை, அப்துல் மஜீது கமறுதீன், முருகன் குமாரவேல், கணேசமூர்த்தி பிரதீபராஜ், சடாசிவம் அருமைத்துரை, மதிமுகராசா விஜயகாந், செபமாலை கண்ணன் ஆகிர் சுயேட்சைக்குழு சார்பில் கையளித்த வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இருப்பினும் தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் 3 சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்களை நிராகரிக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்தி 79 ஆயிரத்து 584 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 92 ஆயிரத்து 264 வாக்காளருமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 5 இலட்சத்தி 71 ஆயிரத்தி 848 வாக்காளர்களும் இம்முறை வாக்களிக்க உள்ளனர்.

இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் களமறிங்கியுள்ளதால் தேர்தலை கவனமாக நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post