சமகால அரசியல் நிலைமைகள் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் மாநகர முதல்வரிடம் கேட்டறிந்த ஆப்கானிஸ்தான் தூதுவர் - Yarl Voice சமகால அரசியல் நிலைமைகள் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் மாநகர முதல்வரிடம் கேட்டறிந்த ஆப்கானிஸ்தான் தூதுவர் - Yarl Voice

சமகால அரசியல் நிலைமைகள் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் மாநகர முதல்வரிடம் கேட்டறிந்த ஆப்கானிஸ்தான் தூதுவர்

யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எச். ஈ. மொஹமட் அஸ்ரப் ஹைதரி ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று  யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் தூதுவர் முதலில் தனது அனுபவங்களை முதல்வருடன் பகிர்ந்து கொண்டார். அவர் தனது அனுபவப்பகிர்வில் தங்களுடைய நாட்டு மக்கள் எதிர்கொண்ட 40 வருட பிரச்சினைகள் அதன் பின்னர் படிப்படியாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் தமது நாட்டு மக்களின் தற்போதைய முன்னேற்றம் தான் பணியாற்றிய பல்வேறு நாடுகளில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் உள்ளிட்ட விடயங்களை விரிவாக சுட்டிக்காட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மக்களின் நிலைமைகள் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பில் தூதுவர் வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் பல இன்னும் தீர்க்கப்படாதுள்ளமையினை சுட்டிக்காட்டினார். காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்இ காணி விடுவிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்றம் குறித்தும் விளக்கினார்.

அதாவது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையினையும் பல காணிகள் விடுவிக்கப்பட்டமையையும் சுட்டிக்காட்டிய முதல்வர் இவற்றில் இன்னும் முன்னேற்றங்கள் தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையில் நீண்டகாலமாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுவரும் அரசியல் தீர்வு விடயங்களில் கடந்த அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட பங்களிப்புக்கள் தொடர்பிலும் கடந்த தேர்தல் மூலம் ஏற்பட்ட மாற்றம் புதிய ஆட்சி மாற்றத்தினால் புதிய யாப்பை உருவாக்கும் பணிகள் இடை நடுவில் கைவிடப்பட்டமை தொடர்பிலும் இப்படியான சந்தர்ப்பத்தில் தற்பொழுது எதிர்நோக்க இருக்கின்ற பொதுத் தேர்தல் இதில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் விரிவான விளக்கமொன்றை முதல்வர் முன்வைத்தார்.

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதன் பின்னர் அரசியல் தீர்வு விடயத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து  முதல்வர் குறிப்பிடும் பேர்து தமிழ் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றது என்பதையும் அரசு எம்முடனே பேச வேண்டும் எனவும்இ இதுவரை எமது தலைவர்களுடன் அரசு பேச முன்வரவில்லை என்றும் பொதுத் தேர்தலுக்காகவே அவ்வாறு பேசாமல் இருக்கக் கூடும் எனவும் அதன் பின்னர் பேசுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே தொடர்ச்சியான தமது ஆணையை வழங்கி வருகின்றார்கள் என்றும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிச்சயமாக இத் தீர்மானத்திலேயேதான் இருக்கின்றார்கள் என்றும் எதிர்காலத்தில் இவ் ஆதரவு இன்னும் அதிகரிக்கும் என்றும் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் பாராளுமன்றில் உள்ள பலத்தை சிதைக்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் உதிரிக்கட்சிகளின் போக்குகள் குறித்து மக்கள் மிகுந்த தெளிவுடனே இருக்கின்றார்கள் என்பதையும் உறுதிபட முதலர்வர் தெரிவித்தார்.

இதன் போது தூதுவர் அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகள் குறித்து தானும் அறிந்திருப்பதாகவும் மேலும் தொடர்ச்சியாக அரசியல் யாப்பு உருவாக்க பணிகளை முன்னெடுப்பதற்கான முயற்களை தேர்தலின் பின்னரும் முன்னெடுக்குமாறு கூறியிருந்தார்.

இறுதியாக கடந்த அரசின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் யாழ் நகர் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தூதுவருக்கு முதல்வர் விரிவான விளக்கம் ஒன்றை முன்வைத்தார். மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும்இ மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் தூதுவர்  கேட்டறிந்து கொண்டார்.

இவ்வாறாக கலந்துரையாடல் நிறைவில் தூதுவர் பிரமுகர்கள் வருகைப்பதிவு குறிப்பெழுதும் குறிப்பேட்டில் தனது வருகையின் குறிப்பையும் பதிவு செய்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த சந்திப்பில் தூதுவர் நினைவுப் பரிசு ஒன்றை முதல்வருக்கு வழங்கினார். முதல்வரும் தூதுவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post