சுவிஸ் வாழ் ஈழச்சிறுமியின் நிதி உதவியில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி - Yarl Voice சுவிஸ் வாழ் ஈழச்சிறுமியின் நிதி உதவியில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி - Yarl Voice

சுவிஸ் வாழ் ஈழச்சிறுமியின் நிதி உதவியில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி

சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் ஈழத் தமிழ் சிறுமி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த அவரது பள்ளித்தோழியும் இணைந்து வழங்கிய நிதி உதவியில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான உதவிகள் நேற்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த ராசன்-விஜயகுமாரி தம்பதிகளின் புதல்வி பிரவீனா மற்றும் அவரது பள்ளித்தோழியான டானா குகர் ஆகிய இரு சிறுமிகளின் நிதிப்பங்களிப்பில் இவ்வாறு உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் 9 ஆம் வகுப்பு கல்வியை தொடர்ந்து வரும் இருவருக்கும் வழங்கப்பட்ட ஒப்படை வேலைத்திட்டத்தை இவ்வாறு மனிதாபிமான உதவித்திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் பிரவீனா-டானா இரு சிறுமிகளும் இணைந்து கேக் தயாரித்து விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு 3 ஞாயிற்றுக் கிழமைகள் கேக் தயாரித்து விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகையினை அனுப்பி தமது உறவினர்கள் ஊடாக இவ் உதவியை வழங்கிவைக்க காரணமாக இருந்துள்ளனர்.

போரினால் பாதிப்பிற்குள்ளாகிய மற்றும் பாதிப்பிற்குள்ளாகியவர்களின் பிள்ளைகளுக்கும் 2 இலட்சத்து 21 ஆயிரம் ரூபா பெறுமதியில் கற்றல் உபகரணங்களும் கல்விக் கட்டணமும் துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்படுள்ளது.

இறுதிப்போரில் தமது தாயாரை இழந்து பெயர்த்தியாரின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் முள்ளியவளையைச் சேர்ந்த  சகோதரிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் அவர்களின் ஒருவருட கல்விக் கட்டணமும் செலுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினத்தை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கரநாற்காலி ஓட்டப்போட்டியில் முதலிடத்தை வென்ற கிளிநொச்சி பிரமந்தனாறைச் சேர்ந்த தரம் 9 மாற்றுத்திறனாளி மாணவக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டது.

இதேபோன்று இறுதிப்போரில் காயத்திற்குள்ளாகி தண்டுவடம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிஇ கல்மடு நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் இரண்டு பிள்ளைகளுகளின் கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

போரில் தந்தையை இழந்துள்ள நிலையில் கூலிவேலைக்கு செல்லும் தாயின் உழைப்பில் கல்வியைத் தொடரமுடியாத நிலையில் க.பொ.த.சாதாரண தரத்தை எதிர்நோக்கி உள்ள கிளிநொச்சி பிரமந்தனாறைச் சேர்ந்த  மாணவிக்கு  இந்த ஆண்டிற்கான கல்விச்செலவை வழங்கியதுடன் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இதேபோன்று அப்பகுதியைச் சேர்ந்த தரம் 7 மாணவி  தரம் 10 மாணவன்  மற்றும் கல்லாறு பகுதியைச் சேர்ந்த தரம் 9 மாணவி ஆகியோருக்கான இவ்வாண்டுக்கான கல்விச் செலவும் பொறுப்பேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முள்ளிவளையைச் சேர்ந்த 2 மாணவிகள் பிரமந்தனாறைச் சேர்ந்த 18 மாணவர்கள் கல்மடுநகரைச் சேர்ந்த 2 மாணவர்கள் பரந்தன் உமையாள் புரத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் என போரால் பாதிப்புகளைச் சந்தித்த 31 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post