கொரோனோ தாக்கம் தொடர்பில் யாழ்ப்பாண மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice கொரோனோ தாக்கம் தொடர்பில் யாழ்ப்பாண மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice

கொரோனோ தாக்கம் தொடர்பில் யாழ்ப்பாண மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

யாழ்.மாவட்டத்தில் மக்கள் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான பாதிப்பை உணர்ந்து கொள்ளவில்லை. அதுவே மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பாதகமாக அமையும் வாய்ப்புக்கள் உள்ளது. என எச்சரிக்கை விடுத்திருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண மருத்துவ அதிகாரிகள்,

எமது மாவட்டத்தில் உள்ளவர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. 100 வீதம் வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு தாக்கினால் எதுவுமே செய்ய முடியாது. அந்த தாக்கம் மேலும் அதிகரித்தல் எதிர்கொள்ள மருத்துவ வசதிகள் கூட இல்லை எனவே வரும்முன் காப்பதே வழி என அவர்கள் மேலும் கூறியுள்ளனர்

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மருத்துவ அதிகாரிகள் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளனர் இது குறித்து மேலும் அவாகள் கூறுகையில்,

மக்கள் தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடாதீர்கள் என அரசு தொடர்ந்து எச்சரிக்கிறது. அதற்கமைய இலங்கையில் பிற மாவட்டங்களில் மக்கள் நடமாட்டத்தை பெருமளவில் குறைத்துள்ளனர். ஆனால் யாழ்.மாவட்டத்தில் மக்கள் மிச சாதாரணமாக நடமாடி திரிகிறார்கள். அரசாங்க ஊழியர்கள் தமக்கு வழங்கப்பட்ட விடுமுறையை சுற்றுலாக்களில் செலவிடலாம் என நினைக்கிறார்கள். பொது இடங்களில் குடும்பமாக கூடுகிறார்கள்.

யாழ்ப்பாண மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்பதுபோல் அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றது. ஆனால் அது ஆபத்தானது. பலாலி விமான நிலையம் ஊடாக மட்டும் 60ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் வந்துள்ளனர், கொழும்பு ஊடாக நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்

யாழ்ப்பாணத்திற்குள் வந்திருக்கின்றனார்.. அவர்கள் தற்போதுதான் கண்காணிக்கப்படுகின்றார்கள். அவர்கள் கொரோனா நோயாளிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் நோய் கடத்துபவர்களாக இருக்க மாட்டார்கள் என கூற முடியாது. மேலும் வெளிநாட்டவர்கள் பலர் தனிமைப்படுத்தல் சோதனைக்குட்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் சோதனைக்குட்படாத ஒரு வெளிநாட்டவர் உறவினர்களை தாம் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார் இவ்வாறான சம்பவங்கள் மிக ஆபத்தானது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்திற்கு நிகராக இலங்கையில் பரவி வருகின்றது. இலங்கையில் செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகள் 500 தான் உண்டு. யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் 20 கட்டில்கள் மட்டுமே உள்ளது. தனியான அவசர சிகிச்சை பிரிவு கிடையாது, அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் கிடையாது,

பிரத்தியேமாக இந்த சிகிச்சை நிலையத்திற்கு மருத்துவர்கள், தாதியர்கள் ஒதுக்கப்படவில்லை. இருக்கும் மருத்துவர்களும், தாதியர்களுமே பணியாற்ற வேண்டும். மருத்துவர், தாதியர்களுக்கு தற்காப்பு உடைகள், முககவசங்கள், காலணிகள் போதுமான அளவில்லை இல்லை. தேசிய அளவில் அடிப்படை ஆரம்ப சிகிச்சைக்கான மருந்து கிடையாது.

ஒட்டுமொத்தமாக இலங்கை இன்றளவும் வளர்ந்துவரும் நாடு. சீனா அல்லது இத்தாலிபோன்ற வளர்ச்சியடைந்த நாடு அல்ல. பரப்பளவில் குறைந்த மிகச்சிறிய நாடு. எனவே வரும் முன்னர் முடியுமான வரையில் பாதுகாத்து கொள்வதே சிறந்தது. நோய் பரவல் தீவிரமானால் தற்போது இத்தாலி எடுத்துள்ளதைபோல் பலரை காப்பாற்ற முடியாமல்போகும்.

2 வாரங்களுக்கு யாழ்.மாவட்டம் உள்ளடங்கலாக வடக்கின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை முற்றாக நிறுத்துவதற்கு யாழ்.மாநகர முதல்வரின் உதவியினை கேட்டிருக்கிறோம். அவர் ஆளுநருடன் பேசி இந்த விடத்திற்கு தீர்வு பெற்றுதருவதாக கூறினார் ஆனால் ஆளுநர் தற்போது கொழும்பில் உள்ளார்

எனவே நல்ல தீர்மானம் எடுக்கப்படும் என நம்புகிறோம். சமய தலைவர்கள், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பொறுப்புள்ளவர்களாக மக்கள் கூடுவதை தடுக்கவும், போதிய விழிப்புணர்வை ஊட்டவும் நடவடிக்கை எடுங்கள். கோவில் திருவிழாக்களும், பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தேவாலயங்களில் வழிபாடுகள், பெருமெடுப்பில் திருமணங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இப்போதும் யாழ்.மாவட்டத்தில் நடக்கிறது.

இவை முற்றாக நிறுத்தப்பட வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை அடையாளப்படுத்துங்கள். அத்தியாவசிய தேவையில்லாமல் பொது இடங்களில் கூடாதீர்கள். மிக இயலாத நிலை உருவானால் மட்டும் பெரிய வைத்தியசாலைகளுக்கு செல்லுங்கள், நோயாளர்களை பார்வையிட அதி முக்கியத்துவம் என்றால் ஒருவர் மட்டும் செல்லுங்கள்.

வைத்தியசாலைகளில் ஒரு கொரோனா நோயாளி ஊடாக குறைந்தது 200 பேருக்கு அந்த நோயை பரப்ப முடியும். எனவே  முடியுமானவரை நடமாட்டத்தை குறையுங்கள், மக்கள் 2 வாரங்கள் அமைதியாக இருந்தால் இதனை முற்றாக கட்டுப்படுத்தலாம் என்றனர்

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவ கலாநிதி த.காண்டீபன் தலமையில், மருத்துவ கலாநிதிகளான கே.உமாசுதன், சு.மோகனகுமார், கே.சுஜந்தன், வி.தாசஷன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்0/Post a Comment/Comments

Previous Post Next Post