பகிரங்க விவாதத்திற்கு கஜேந்திரகுமார் தயார். விக்னேஸ்வரன் சுமந்திரன் தயாரா? மணிவண்ணண் கேள்வி - Yarl Voice பகிரங்க விவாதத்திற்கு கஜேந்திரகுமார் தயார். விக்னேஸ்வரன் சுமந்திரன் தயாரா? மணிவண்ணண் கேள்வி - Yarl Voice

பகிரங்க விவாதத்திற்கு கஜேந்திரகுமார் தயார். விக்னேஸ்வரன் சுமந்திரன் தயாரா? மணிவண்ணண் கேள்வி

எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய மூன்று பிரதான கட்சிகளும் பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள வேண்டுமென விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏனைய இரண்டு கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளது.

பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தயார் எனத் தெரிவித்துள்ள அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணண் அந்த விவாதத்திற்கு சுமந்திரன் மற்றும் விக்கினேஸ்வரன் தயாரா என்றும் கேட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அந்த அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக் கொண்டு பிகரங்க விவாதத்திற்கு தாம் தயார் என அறிவித்துள்ளதுடன் ஏனையவர்களும் அவ்வாறு விவாதத்தை மேற்கொள்ளத் தயாரா என்றும் கேட்டுள்ளது.

இது குறித்து முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணண் தெரிவித்ததாவது..

தேர்தலொன்று நடைபெறவிருக்கின்ற நிலையில் மூன்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் பிகிரங்க விவாதத்தை மேற்கொள்ள வேண்டுமென யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பகிரங்க விவாதத்தை மேற்கொள்வதற்கான அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆகையினால் அத்தகைய விவாதத்திற்கு எமது கட்சி தயாராகவுள்ளது. அதே போல ஏனைய இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் தயார் என்றால் பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள முடியும். அதனூடாக மக்களும் பல விடயங்களைத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆகையினால் பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள வேண்டியது பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன்.

எனவே ஒவ்வொரு கட்சிகளிலில் இருந்து இரண்டு பேர் கலந்து கொள்ளக் கூடிய வகையில் அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகள் விவாதத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும். மக்களுக்கு எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்ற எமது கட்சியானது எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதனடிப்படையில் பகிரங்க விவாதத்திற்கு நாம் தயார் என்பதை தெரிவித்துக் கொள்கின்ற அதே வேளையில் ஏனைய இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் அதற்குத் தயாரா என்பதையும் கேட்கின்றோம். ஆகவே விடுக்கப்பட்ட பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை ஏனைய இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டு பகிரங்க விவாததற்திற்கு முன்வரும் போது எமது கட்சியும் அந்த விவாதத்தில் பங்கெடுக்கத் தயார் என மணிவண்ணண் மேலும் தெரிவித்தார்.


;.

0/Post a Comment/Comments

Previous Post Next Post