கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பீற்றர்ஸ் பேர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் இதில் எலிக்கு நடத்திய சோதனை வெற்றி அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாகப்பரவி வருவதையடுத்து தொற்றானவர்களைக் குணப்படுத்தும் மருந்தும் வைரஸ் தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில் பீற்றர்ஸ்பேர்க் மருத்துவ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் ஆன்ற்ரியோ கம்போட்டா லூயிஸ் பாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.
இதேகுழுவினர் 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய்க்கும் 2014ஆம் ஆண்டு மெர்ஸ் நோய்க்கும் மருந்து கண்டுபிடித்திருந்தனர். தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் சார்ஸ் மற்றும் மெர்ஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
எனவே கடந்த கால மருந்து கண்டுபிடிப்பு முறையிலேயே நிபுணர்கள் குழு கொரோனாவுக்கும் மருந்து கண்டுபிடிக்க ஆய்வு நடத்தியது. அதில் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர். இந்தத் தடுப்பு மருந்தை எலிக்குச் செலுத்தி பரிசோதித்தனர். அது வெற்றிகரமாக செயற்படுகிறது.
அதாவது உடலில் கொரோனா வைரஸ் கிருமியை எதிர்த்து போராடும் ஆற்றலை உருவாக்கி அதை அழிக்கிறது. எனவே இந்த மருந்தை மனிதனுக்குப் பயன்படுத்தினால் நோய்த் தாக்குதலைத் தடுத்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.
ஆனாலும் இன்னும் சில பரிசோதனைகள் நடத்த வேண்டியுள்ளது. முதலில் இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு புதிய மருந்து ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் ஒப்புதல் பெறவேண்டும்.
இதற்காக விண்ணப்பிக்கும் பணியில் ஆய்வுக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒப்புதல் கிடைத்த பிறகு மனிதர்களுக்கு சோதனை நடத்தப்படும். அதுவும் வெற்றி பெற்றால் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.
ஆனாலும் அனைத்து பணிகளும் முடிந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் வரை ஆகலாம் என்று நிபுணர் குழுவினர் கூறியுள்ளனர்.

Post a Comment