மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டுவதற்கு சரியான பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் - உமாச்சந்திரா பிராகாஷ் வலியுறுத்து - Yarl Voice மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டுவதற்கு சரியான பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் - உமாச்சந்திரா பிராகாஷ் வலியுறுத்து - Yarl Voice

மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டுவதற்கு சரியான பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் - உமாச்சந்திரா பிராகாஷ் வலியுறுத்து

ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கின்ற நிலையிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டுவது தொடர்பில் உரிய பொறிமுறை வகுக்ககப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி உமாசந்திரா பிரகாஸ் யாழில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தவர்களும் வெளி மாவட்டத்தில் தங்கியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களும் அந்தந்த மாவட்டங்கள் செல்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஊரடங்கு சட்ட நடைமுறையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பல்வெறு தேவைகளின் நிமித்தம் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றவர்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3000 பேர் தங்கியுள்ளனர். அதே போன்று யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கின்றனர்.

ஆகவே தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் அவர்கள் தமது சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பில் மாவட்டத்திலுள்ள அரச உயர் அதிகாரிகளிடம் கேட்டாலும் அவர்களும் உரிய பதில்களை வழங்காமல் மாறுபட்ட கருத்துக்களையே தெரிவிக்கின்றனர்.

ஆகவே மாவட்டம் விட்டு மாவட்டம் வந்தவர்கள் சென்றவர்கள் என அவர்களுக்கான உரிய பொறிமுறையொன்று உடனடியாக வகுக்ககப்பட வேண்டும். அத்தகைய பொறிமுறையொன்றின் ஊடாகவே இந்தப் பிரச்சனைக்கு சரியானதொரு தீர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

ஆனால் இதற்காக பொறிமுறையோ திட்டமோ ஏதும் இதுவரையில் இல்லை. ஆகவே இந்த விடயத்தில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

இதேபோல ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் உற்பத்திப் பொருட்களை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை இருக்கிறது. இதற்கும் சரியான பொறிமுறை வகுக்கப்பட வேண்டியது அவசியமானது. இதனுர்டாகவே விவசாயிகளையும் பாதுகாக்க கூடியதாக இருக்கும்.

மேலும் தற்பொதைய இடர் காலத்தில் நிவாரணப் பொருட்கள் அரசியல் மயப்படுத்தப்படாமல் மக்களுக்கு நேர்மையாக கிடைப்பதற்கு மாவட்டச் செயலர் ஆளுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதே போல அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையில் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பொது மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இது குறித்தும் பொறுப்பு வாய்ந்த தரப்பினர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post