வடக்கிலிருந்து வேறு மாகாணங்களுக்கு நெல் ஏற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் - ஆளுநரிடம் சிவஞானம் கோரிக்கை - Yarl Voice வடக்கிலிருந்து வேறு மாகாணங்களுக்கு நெல் ஏற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் - ஆளுநரிடம் சிவஞானம் கோரிக்கை - Yarl Voice

வடக்கிலிருந்து வேறு மாகாணங்களுக்கு நெல் ஏற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் - ஆளுநரிடம் சிவஞானம் கோரிக்கை

வடக்கு மாகாணத்திலிருந்த வேறு மாகாணங்களுக்கு நெல் கொண்டு செல்வது தடை செய்யப்பட வேண்டுமென வடக்கு ஆளுநரிடம் வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வடக்கு ஆளுநர் பி.எச்.எம். சாள்ஸ் அவர்களுக்கு சிவஞானம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

அவசர தேவைகளை பூர்த்தி செய்தல் என்ற தலைப்பின் கீழ் தங்களுக்கும் ஏனையோருக்கும் நாம் எழுதிய 08.04.2020 ஆம் திகதிய கடிதத்தின் கடைசிக்கு மேல் பந்தியில் பின்வருமாறு எழுதியிருந்தேன்.

'குறிப்பாக உணவுப் பொருட்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலையில் அதனால் அதிகரித்த விலையும் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகுவது  தவிர்க்கமுடியாததாகும்.

எனவே மேலதிக நெல் கொள்வனவை மேற்கொண்டு உள்ளூரில் இருக்கக்கூடிய அரிசி ஆலைகள் மூலம் அரிசி உற்பத்தியை மேற்கொள்வதற்கும் இச்சங்கங்கள் ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்.'

சாதாரணமாக வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உற்பத்தியாகும் நெல் இம்மாகாண மக்களின் அரிசித் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யக்கூடியது என்பது எல்லோராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத் தாகும்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல் தனியார் துறையினரால் கொள்வனவு செய்யப்பட்டு மாகாணத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்படுவதால் பல சந்தர்ப்பங்களில் அரிசித் தட்டுப்பாடு எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது.

வழமையாக குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யும் தனியார் துறையினர் தற்போது கூடிய விலை கொடுத்து கொள்வனவு செய்யக்கூடிய சாத்தியம் யதார்த்தமானது.

அரிசி விநியோகத்தைப் பொறுத்தவரை இன்னும் ஐந்து அல்லது ஆறுவாரங்களில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை நிறையவே உண்டு.

எனவே வடமாகாணத்தின் ஐந்து மாவட்டமெதிலுமிருந்தும் வட மாகாணத்திற்கு வெளியே நெல் கொண்டு செல் வதைத் தடைசெய்தல் மிக கட்டாயமானதாகவே தோன்றுகிறது.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வெளியே நெல் கொண்டு செல்வது தடை செய்யப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது போல வட மாகாணத்திலும் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படல் வேண்டும் எனக் கோரப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post