யாழிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
ஊரடங்குச் சட்ட நிலைமை காரணமாக கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் குறிப்பாக சில்லறை வர்த்தகர்கள் ஒற்றைக் கதவிலே அல்லது பிற்கதவிலே வியாபாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அயலில் உள்ள மக்கள் அல்லது அவர்களுடைய வழக்கமான வாடிக்கையாளர்கள் அந்தக் கடைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
வடகிழக்கு மாகாணங்களைப் பொறுத்த மட்டிலே பல கடைகளை நிர்வகிக்கின்ற வர்த்தகர்கள் பொறுப்புணர்வோடு செயற்பட்டாலும் கூட இன்னும் பலர் எறிகிற வீட்டிலே பிடுங்குவது இலாபம் என்ற தோரணையிலே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலைமை இன்னமும் அகலவில்லை.
இவை தொடர்பில் எங்களுடைய பகிரங்கமான சுட்டிக்காட்டலுக்குப் பிறகு ஒரு சிலர் தங்களது போக்கினை மாற்றிக் கொண்டாலும் கூட இன்னும் பலர் அதே பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இந்த வர்த்தகர்கள் தொடர்பிலே ஒரு விடயத்தை நாங்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொள்ள விரும:புகிறோம்.
இந்த வர்த்தகர்கள் ஒன்றினை உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் மக்கள் மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மக்கள் மத்தியில் தான் தொடர்ந்தும் வாழப் போகின்றவர்கள்.
எனவே பிள்ளைகளுக்கோ அல்லது பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்ப்பதற்கோ அல்லது சிதனம் சேர்ப்பதற்கும் இதுவல்ல நேரம் என்பதனையும் பொறுப்புணர்வொடு திட்டவட்டமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இந்த விவகாரத்திலே வர்த்தக சங்கங்கள் தயவு செய்து முன்வந்து தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிற இந்தக் கேவலமான நிலைமைக்கு முற்றுப் புள்ளி வைக்க கைகொடுக்க வேண்டுமென்றும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். ஆயினும் இந்த வேண்டுகோள்கள் எல்லோரிடத்திலும் பலனளிக்காது என்பது எங்களுக்குத் தெரியும்.
ஊரடங்குச் சட்டம் நீடித்துக் கொண்டிருக்கிற நிலைமையில் மருந்தகங்களை திறந்து வைக்க அனுமதிப்பது போல மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை மல்லிகைப் பொருட்களை வீட்டுப் பாவனைக்கு உணவு தயாரிப்பதற்குத் தேவைப்படும் பொருட்களைவ விற்பனை செய்கின்ற சில்லறைக் கடைகளை திறந்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதியளிக்குமானால் அந்தக் கடைகள் ஊடாக மக்கள் வழக்கமான விலையில் பொருட்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இன்று இருக்கிற இந்த கொள்ளை இலாபம் அடிக்கிற நிலைமைகளுக்கு பிரதான காரணம் கடைகள் பூட்டப்பட்டிருப்பது தான். கடைகள் திறக்கப்படுமாக இருந்தால் போட்டிகள் இருக்கும். எனவே விலைகள் இயல்பாகவே கட்டுப்படுத்தப்படும். ஆகவே இந்த விடயத்தையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் நாங்கள் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மக்கள் குவிந்து விடுவார்கள் என்று அச்சப்படத் தேவையில்லை. இப்போதும் கூட ஒற்றைக்கதவு வியாபாரத்தைச் செய்து கொண்டிருக்கிற கடைகளுக்கு முன்னாலே அவர்கள் நின்று கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே கடைகளைத் திறந்து வைத்தால் தான் அதைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆக மல்லிகைப் பொருட்களை உணவுப் பொருட்களைவ விற்பனை செய்கிற கடைகளை திறப்பது தொடர்பில் தான் நாங்கள் பேசுகிறோம். இதை ஒரு அவசர வேண்டுகோளாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும். அவ்வாறு அரசாங்கம் கவனத்தில் எடுத்து இதற்கான பணிப்புரைகளை விடுக்க வேண்டுமென்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
Post a Comment