நுண்கடன்களை மீள் செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை! - Yarl Voice நுண்கடன்களை மீள் செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை! - Yarl Voice

நுண்கடன்களை மீள் செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

கடன்களை மீள வசூலிப்போர் அக்கடன்களை மீளச் செலுத்தும் காலத்தை இயல்புநிலை திரும்பும்வரை மனிதாபிமான அடிப்படையில் ஒத்திவைக்க வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளதுடன் இது தொடர்பில் மீண்டும் அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் -

நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் தமது கடன்களை மீள் வசூலிக்கும் சந்தர்ப்பத்தில் மக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாவது மட்டுமல்லாது அவமரியாதைகளுக்கும் உள்ளாவதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில் நுண்கடன் நிறுவனங்களில் கடன்களை பெற்ற அதிகமான மக்கள் தற்போதைய நாட்டு நிலைமை காரணமாக தங்களால் உடனடியாக அக்கடனை திரும்ப செலுத்த முடியாதுள்ளதுடன் தமக்கு மனிதாபிமான அடிப்படையில் காலம் தாழ்த்தி கடனை மீளச் செலுத்துவதற்கான சலுகையை தருமாறு கோருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை தடுக்கும் நோக்குடன் சுகாதார துறையினரது ஆலோசனைக்கு அமைய சமூக இடைவெளியை பேணுவதற்காக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அரச ஊழியர்கள் முதல்கொண்டு நாளாந்தம் கூலி வேலை செய்து தமது குடும்ப வருமானத்தை பெறும் அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக சிறு கடைகள் மற்றும் நாளாந்தம் தொழில் செய்து தமது குடும்ப வாழ்வை மேற்கொண்டுவந்த குடும்பங்கள் சொல்லொணாத் துயரங்களை நாளாந்தம் சந்தித்துவருகின்றனர்.

இத்தகைய மக்களே அதிகளவில் தமது குடும்ப தேவை கருதி பல நுண்கடன் நிறுவனங்களில் கடன்களைப் பெற்றிருந்தனர். நாட்டின் முடக்க நிலையை அடுத்து அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களால் பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கான சுற்றறிக்கைகள் விடுக்கப்பட்டு மக்களின் அசௌகரியங்களை குறைப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டிருந்தார்.

இதில் அரச மற்றும்' தனியார் வங்கிக் கடன்களை பெற்ற மக்களுக்கும் சலுகைகளை வழங்குமாறு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலைவயில் குறித்த மக்களது நிலைமைகளை கருத்திற் கொண்டு ஒரு மனிதாபிமானமான அடிப்படையில் இயல்புநிலை திரும்பும்வரை காலம் தாழ்த்தி அக்கடன்களை மீளச் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தை குறித்த நிறுவனங்கள் அம்மக்களுக்கு வழங்கி அவர்கள் தற்போது எதிர்கொள்ளும் இடர்பாடுகளை ஓரளவேனும் குறைப்பதற்கு வழிவகை செய்வது அவசியமாகும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post