தொண்டமான் அவர்களின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் - சிவஞானம் சிறீதரன - Yarl Voice தொண்டமான் அவர்களின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் - சிவஞானம் சிறீதரன - Yarl Voice

தொண்டமான் அவர்களின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் - சிவஞானம் சிறீதரன



இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு  பேரிழப்பாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்; தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்து அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
மலையக மக்களின் வாழ்வுரிமைக்கும், தொழிற்சங்க உரிமைகளுக்குமாக போராடிய முதல் மலையகத் தமிழ் அரசியற் தலைவரும், இலங்கைத் தொழிலாளர்  காங்கிரசின் ஸ்தாபகருமான முன்னாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான ஆறுமுகம் தொண்டமான் அவரது வழியில் நின்று மலையக மக்களின் தலைவராக செயற்பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே!
ஈழத்தமிழர்களைப் போலவே தமது இருப்பைத் தக்கவைத்து, உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக போராடி வரும் மலையகத் தமிழர்களின் வழிகாட்டியாக, தனது முப்பது வயதிலேயே பாராளுமன்ற உறுப்பினராக மக்கள் ஆணை பெற்று ஓர் இளம் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இருந்து இருபத்தைந்து வருடங்களாக மலையக மக்களின் அரசியற் பிரதிநிதியாக அம்மக்களுக்காக குரல்கொடுத்து வரும் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இழப்பு மலையக மக்களுக்கு பேரிழப்பே!

தனது வாழ்வின் இறுதிக் கணங்களில் கூட புதிய இந்திய உயர்ஸ்தானிகருடன் மலையக மக்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்து, அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் உரையாடியுள்ளமை அவர் தனது மண்மீதும், மக்கள் மீதும் கொண்டிருந்த பற்றின் வெளிப்பாடே ஆகும்.

மிக நீண்டகாலமாக மலையக மக்களுக்காக ஓங்கி ஒலித்து வந்த உரிமைக்குரல் இயற்கையின் நியதியால் ஓய்ந்தாலும் கூட வாழும் காலத்தில் மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகள் மூலம் அவர் என்றென்றைக்கும் மக்கள் மனங்களில் நீங்காது நிலைத்திருப்பார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post