பொலிஸாரும் படைத்தரப்பும் நோய்த்தொற்றை சாட்டாக வைத்து தமிழர்களை மிரட்ட முற்படுகின்றார்கள் - Yarl Voice பொலிஸாரும் படைத்தரப்பும் நோய்த்தொற்றை சாட்டாக வைத்து தமிழர்களை மிரட்ட முற்படுகின்றார்கள் - Yarl Voice

பொலிஸாரும் படைத்தரப்பும் நோய்த்தொற்றை சாட்டாக வைத்து தமிழர்களை மிரட்ட முற்படுகின்றார்கள்

மே 18 ஐயொட்டி நினைவு கூர்தல் வாரத்தை அனுஷ்டிக்க முற்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் போலீசாரோடு முட்டுப்பட வேண்டியிருந்தது. நினைவுகூர்ந்த பெரும்பாலான இடங்களில் பொலிசார் தடுக்க முற்பட்டார்கள.
ஒரு கட்டத்தில் போலீசார் நினைவுகூர்தலில் ஈடுபட்ட கட்சிக்காரர்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் தனிமைப்படுத்தப் போவதாக மிரட்டினார்கள். இப்போது இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டங்கள் 1918ம் ஆண்டு க்குரியவை என்று கூறப்படுகின்றது.
காலத்தின் தேவைக்கேற்ப நவீன தனிமைப்படுத்த சட்டங்களை நிறைவேற்றுவது என்று சொன்னால் அதற்கு நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். ஆனால் அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கூட்டப் போவதில்லை என்று பிடிவாதமாக மறுத்து வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை பழைய தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் தனிமைப் படுத்துவதற்கு போலீசார் எத்தனித்தார்கள்.
எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சட்டவாளர்கள் ஏனைய சட்டவாளர் களோடு இணைந்து இந்த விடயத்தை வெற்றிகரமாக தோற்கடித்தார்கள்.இந்த வெற்றியானது இரண்டு விடயங்களை நமக்கு உணர்த்துகின்றது. முதலாவது ஐக்கியப்பட்டு எதிர்ப்பை காட்டினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இரண்டாவது ஒரு நோய்த் தொற்றுக் காலத்திலும் பொலிசாரும் அரச படைகளும் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பது.
முதலாவதாக ஐக்கியத்தை பார்ப்போம். தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள்ளும் தமிழரசுக் கட்சியை போலவே சட்டத்துறையில் சேர்ந்தவர்கள் அதிகம் உண்டு. கட்சியின் முக்கியஸ்தர்கள் என்று கருதப்படும் நால்வரில் ஒருவரை தவிர ஏனைய மூவருமே சட்டவாளர்கள் தான். கட்சிக்கு ஆதரவாக காணப்படும் செயற்பாட்டாளர்கள் என்று பார்த்தால் அங்கேயும் சட்டவாளர்கள் அதிகம.; இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் நீதிமன்றங்களில் வழக்கு என்று வந்தால் தமிழரசுக் கட்சியும் சரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சரி அந்த வழக்குகளை எதிர்கொள்ள தேவையான தரமான சட்டவாளர் அணியை கொண்டிருக்கின்றன.
இம்முறை தனிமைப்படுத்தல் வழக்கிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 15 சட்டவாளர்கள் ஒன்றிணைந்து அந்த வழக்கை எதிர் கொண்டிருக்கிறார்கள். அந்த வழக்குக்கு தலைமை தாங்கியது அன்ரன் புனிதநாயகம். விக்னேஸ்வரனோடு இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.ஆனால் தேர்தல் வேட்புமனு சமர்ப்பிக்கும் பொழுது விக்னேஸ்வரனின் கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கு மறுத்துவிட்டார். இந்த வழக்கில் அவர் பெற்ற வெற்றி என்பது ஒரு கூட்டு வெற்றி என்று அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் கூறுகின்றார.
அதாவது இது ஐக்கியதால் கிடைத்த வெற்றி. ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீராவியடியில் புத்த பிக்குவின் உடலை தகனம் செய்த விவகாரத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் அன்ரன் புனிதநாயகத்தோடு இணைந்து வழக்கை வெற்றிகரமாக எதிர்கொண்டார்கள.; மேற்சொன்ன வெற்றிகள் நமக்கு எதை உணர்த்துகின்றன என்றால் ஐக்கியப்பட்டு வேலை செய்தால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பது தான் இது முதலாவது.
இரண்டாவது யாரையாவது தனிமைப் படுத்துவது என்று சொன்னால் அதை சம்பந்தப்பட்ட சுகாதார சேவை அதிகாரிகள் தான் செய்யலாம் போலீசார் செய்ய முடியாது என்ற தொனிப்பட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது ஒரு முக்கியமான தீர்ப்பு. ஏனெனில் கோவிட்-19 க்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு படைநடவடிக்கை போலவே முன்னெடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளுக்கு எதிரான கட்டமைப்புக்கு கோவிட்-19 க்கு எதிரான செயலணி என்று அரசாங்கம் பெயர் வைத்திருக்கிறது. அதன் தலைவராக படைத் தளபதியே நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்ல கோவிட்-19க்க எதிரான பெரும்பாலான நடவடிக்கைகளில் படைத்தரப்பு முன்னணியில் நிற்கிறது. தனிமைப்படுத்தல் முகாம்களை பராமரிப்பது; வீதி போக்குவரத்தில் தனியாள் இடைவெளிகளை பேணுவது ; சமூக அசைவியக்கங்களின் போது தனியாள் இடைவெளிகளை பேனுவது ;சந்தேகத்துக்குரிய நோய்த் தொற்றாளர்களைப் பின் தொடர்ந்து சென்று கண்டுபிடிப்பது
நோய் தொற்று என்று சந்தேகிக்கப்படும் கிராமங்களைச் சுற்றி வளைத்து தனிமைப்படுத்துவது; ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களை சோதிப்பது போன்ற எல்லா விடயங்களிலும் படைத்தரப்பே ஈடுபடுகின்றது.
அதேசமயம் அரச அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட விடயங்களிலும் படைத்தரப்பு எல்லாவற்றிலும் தலையிடுகின்றது. உதாரணமாக இரண்டு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத்தான் தடைகள் அதிகமுண்டு. ஒரு மாகாணத்துக்குள் நிகழும் போக்குவரத்துக்கு தடைகள் இல்லை என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.
குறிப்பாக மாகாணங்களுக்குள் கட்டுமானத் துறைக்குரிய பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு தடைகள் ஏதும் கிடையாது. ஆனால் வடமாகாணத்தில் மாங்குளத்தில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியில் நிலைமை அப்படியல்ல. அங்கே வவுனியாவில் இருந்து வரும் பொருட்கள் கடுமையாக சோதிக்க படுகின்றன. அல்லது தடுக்கப்படுகின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அரச அதிபர்களோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரையாடி இருக்கிறார்கள்.
அரசு உயர் அதிகாரிகள் தம்மால் படைத் தரப்பை கட்டுப்படுத்த முடியாது ; படைத்தரப்பு தங்களுடைய சொற்களைக் கேட்காது என்ற தொனிப்பட பதில் கூறியிருக்கிறார்கள். இதுதான் நிலைமை வடக்கு கிழக்கில் கோவிட்-19ற்கு எதிரான நடவடிக்கையில் ஆனையிறவிலும் சங்குப்பிட்டி பாலத்திலும் உள்வரும் வெளிச்செல்லும் வாகனங்கள் பதியப்படுகின்றன. வாகன இலக்கம்; சாரதியின் அடையாள அட்டை விவரங்கள் ; வாகனத்தில் பயணம் செய்பவர்களின் தொகை; வாகனம் எங்கிருந்து வருகிறது; எங்கே செல்கின்றது போன்ற எல்லா விபரங்களும் பதியப்படுகின்றன. இது கிட்டத்தட்ட ஒரு போர்ச் சூழலை நினைவுபடுத்துகின்றது.
ஆனையிறவிலும் சங்குப்பிட்டியிலும் மட்டுமல்ல வன்னியின் உள் வீதிகளிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் சில சமயம் வாகனங்களில் செல்பவர்கள் இறங்கி பதிவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்வாறு கடந்த சில மாதங்களாக கோவிட்-19ற்கு எதிரான படையினரின் நடவடிக்கைகளை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது. அவர்கள் வைரஸை கட்டுப்படுத்து வார்களோ இல்லையோ வைரஸின் பெயரால் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வின் அசை வியக்கங்களை கட்டுப்படுத்த முற்படுகின்றார்கள். இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் அவர்கள் தமிழ் மக்களை எப்பொழுதும் சோதிக்க விரும்புகிறார்கள். இதுதான் உண்மை நிலை. இப்படிப்பட்டதொரு பின்னணியில்தான் நினைவுகூர்தல் தொடர்பிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறை யாரோடும் கூட்டு சேராமல் தன்பாட்டில் நினைவு கூர்தலைத் தொடங்கிவிட்டது. நினைவு கூர்தல் வாரத்தை ஒப்பீட்டளவில் அவர்கள்தான் தொடக்கி வைத்தார்கள். வௌ;வேறு இடங்களில் நினைவுகூர்தலை முன்னெடுத்தது அதிகமாக அவர்கள்தான். இவ்வாறு பரவலாக நினைவுகூர்தலை அனுஷ்டிக்க முற்பட்ட போதே அவர்களுக்கு பொலிசார் முட்டுக்கட்டை போட்டார்கள.; முடிவில் முன்னணியின் முக்கியஸ்தர்களை தனிமைப்படுத்த முயற்சித்தார்கள்.
இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும.; தனிமைப்படுத்த என்பதனை அவர்கள் ஒரு நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கை என்பது போல வெளியில் காட்டிக் கொண்டாலும் அது அதன் அரசியல் அர்த்தத்தில் ஒரு தண்டனைதான். அதாவது வெளிப்படையாகத் துணிச்சலாக நினைவுகூர்தலை முன்னெடுத்த ஒரு கட்சிக்கு அவர்கள் தனிமைப்படுத்தலை ஒரு தண்டனையாக வழங்கி அந்தக் கட்சியை சேர்ந்தவர்களை அச்சுறுத்த பார்த்தார்கள் என்பதே உண்மை. இது ஏறக்குறைய ராஜபக்ஷகளின் முதலாவது ஆட்சிக்காலத்தில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று கூறி சில பல்கலைக்கழக மாணவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்பியதை போன்றது.
இப்படித்தான் நினைவுகூர்தல் தினத்திலன்றும் முள்ளிவாய்க்காலில் கூடிய சனங்களை சுகாதார ஏற்பாடுகளை சுட்டிக்காட்டி கலைப்பதற்கு பொலிஸார் முற்பட்டிருக்கிறார.; பொதுச்சுகாதார பரிசோதகர்களை அழைத்து வந்து நோயைக் காரணமாக காட்டி சமூக ஒன்று கூடலைத் தடுக்க முற்பட்டிருக்கிறார்கள். எனினும் ஏற்பாட்டுக் குழு இது விடயத்தில் முன்கூட்டியே நோய்த்தொற்றுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
கை கழுவுவதற்கு ஏற்பாடுகள் இருந்தன. எல்லாரும் மாஸ்க் அணிந்திருந்தார்கள.; ஆட்களுக்கு இடையே இடைவெளி பேணப்பட்டது. இந்த விடயங்களை அவதானித்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நிகழ்வை தடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.
இதுபோலவே பேராசிரியர் ரட்ணஜீவன் கூலை தனிமைப்படுத்த வேண்டும் என்று தென்னிலங்கையில் எழும் குரல்களையும் இந்தப் பின்ணிக்குள் வைத்தே விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று விடயங்களையும் அதாவது மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களை தனிமைப்படுத்த முயற்சித்தமை ; முள்ளிவாய்க்காலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களை முன்னிறுத்தி ஒன்றுகூடலைத் தடுக்க முற்பட்டமை; பேராசிரியர் ரட்ணஜீவன் கூலை தனிமைப்படுத்த வேண்டும் என்று கேட்பது ஆகிய மூன்று நடவடிக்கைகளிலும் போலீசாரும் படைத்தரப்பும் இனவாதிகளும் நோய்த்தொற்றை ஒரு சாட்டாக வைத்து தமிழ்மக்களை வெருட்டவோ அல்லது தண்டிக்கவோ முற்படுகின்றன. இதை இன்னும் கூராகச் சொன்னால் புனர்வாழ்வைப் போலவே தனிமைப்படுத்தலையும் ஒரு தண்டனையாக அவர்கள் பார்க்கிறார்களா?
சில வாரங்களுக்கு முன்பு காபந்து பிரதமர் மஹிந்த கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது முன்னாள் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவரிடம் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டி இருக்கிறார.; வடபகுதியில் நோய்த்தொற்றைக் காரணமாக வைத்து படையினரின் நடவடிக்கைகள் இறுக்கமாக காணப்படுவதை அவர் அந்த இடத்தில் எடுத்துக் கூறியுள்ளார். அவர் அவ்வாறு கூறியபோது மஹிந்தவும் பசிலும் ஒருவர் மற்றவரை பார்த்து சிரித்துக் கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நிலைமைகளில் எந்த மாற்றமும் தெரியவில்லை.
அதாவது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பதினோரு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இப்போதும் போலீசாரினதும் படைத்தரப்பினதும் சுபாவங்களில் மாற்றங்களை காண முடியவில்லை. அவர்கள் எல்லா தமிழ் மக்களையும் குற்றவாளிகளாக அல்லது சோதிக்கப்பட வேண்டியவர்களாக அல்லது தண்டிக்கப்பட வேண்டியவர்களாகத்தான் பார்க்கிறார்கள்.
அதேசமயம் எந்த நோய்த் தொற்றை காரணமாக காட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களை தனிமைப்படுத்த பொலிசார் முற்பட்டார்க ளோ அதே நோய் தொற்று காலத்தில் அதுவும் அந்த நோய்த்தொற்று அதிகம் உடைய ஒரு பிரதேசத்தில் கொழும்பில் படைப்பிரதானிகளும் அரசுப் பிரதானிகளும் மே18 ஐவெற்றி நாளாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அவர்கள் மாஸ்க் அணிந்திருந்தார்கள்.
ஆனால் தனியாள் இடைவெளிகளை பேணவில்லை. குறைந்தபட்சம் முள்ளிவாய்க்காலில் ஏற்பாட்டுக்குழு செய்து வைத்திருந்த தற்காப்பு ஏற்பாடுகளை கூட அவர்கள் செய்திருந்தார்களோ தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்கள் எந்த நினைவுகூர்தலைச் செய்யக்கூடாது என்று தடுக்க முற்பட்டார்களோ அதே நாளை வெற்றி நாளாக அவர்கள் உத்தியோக பூர்வமாகவும் அனுஷ்டித்திருக்கிறார்கள.; இது எதைக் காட்டுகின்றது? ஒரு நோய் தொற்று காலத்திலும் நாடு இரண்டாகப் பிரிந்து தான் இருக்கிறது என்பதையா?

0/Post a Comment/Comments

Previous Post Next Post