வாழ்வாதாரத்திற்கு ஏங்கும் வாழைச் செய்கையாளர்களுக்கு விரைந்து நேசக்கரம் நீட்டுக சுரேஷ் பிறேமச்சந்திரன் - Yarl Voice வாழ்வாதாரத்திற்கு ஏங்கும் வாழைச் செய்கையாளர்களுக்கு விரைந்து நேசக்கரம் நீட்டுக சுரேஷ் பிறேமச்சந்திரன் - Yarl Voice

வாழ்வாதாரத்திற்கு ஏங்கும் வாழைச் செய்கையாளர்களுக்கு விரைந்து நேசக்கரம் நீட்டுக சுரேஷ் பிறேமச்சந்திரன்

வாழ்வாதாரத்திற்கு ஏங்கும் வாழைச் செய்கையாளர்களுக்கு விரைந்து நேசக்கரம் நீட்டுக சுரேஷ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்
[ads id="ads1"]
அம்பன் சூறாவளியால் யாழ்ப்பாண குடியிருப்பாளர்கள் மட்டுமின்றி வாழை செய்கையாளர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு: வங்காள விரிகுடாவில் ஆரம்பித்து இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தினூடாகச் சென்ற அம்பன் புயலின் பாதிப்புகள் இலங்கையிலும் ஏற்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சூறாவளியின் காரணத்தினால் விவசாயிகளும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைப்பயிர்ச்செய்கைக்குப் பெயர்பெற்ற வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் நீர்வேலி, கோப்பாய், இருபாலை, சிறுப்பிட்டி, உரும்பிராய் போன்ற பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வாழை பயிர்ச்செய்கைகள் மிகப் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. ஏறத்தாழ வலிகாமம் கிழக்கில் 800 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளில் இவ்வாறான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளிடமிருந்து மேலோட்டமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக வாழைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கான உரிய சந்தை வாய்ப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு சூழலில், அம்பன் சூறாவளியின் தாக்கமானது அவர்களுக்கு மேலும் பேரிடியாக அமைந்துள்ளது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. விவசாயிகள் வாழைச் செய்கையையே கைவிட்டுவிடலாமோ என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.

நேற்றைய தினம் (24.05.2020) ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்திய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான நட்டயீட்டைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் வாழைக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து உரிய தரப்பினரின் தகவல்களைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.


இந்த நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும், யாழ்ப்பாண விவசாயத் திணைக்களமும் முழுமையான தரவுகளை விரைவாகப் பெற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக உரிய நிவாரணங்கள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோருகின்றோம். அதேபோன்று வலிகாமம் கிழக்கு பிரதேசசபை அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னின்று உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.


நாடாளுமன்ற பிரதிநிதித்துவமோ மாகாணசபை பிரதிநித்துவமோ இல்லாத ஒரு காலகட்டத்தில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை இதனை தங்களது கவனத்தில் எடுத்துச் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

சுரேஷ் க.பிறேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
இணைப்பேச்சாளர்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

0/Post a Comment/Comments

Previous Post Next Post