தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உயர்ந்தது நிலத்தடி நீர் மட்டம்! - Yarl Voice தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உயர்ந்தது நிலத்தடி நீர் மட்டம்! - Yarl Voice

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உயர்ந்தது நிலத்தடி நீர் மட்டம்!

பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
2019ம் ஆண்டு மே மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைவாக இருந்தது. மழை பெய்யத் தொடங்கியதுமே அடிமட்டத்தில் கிடந்த நீர்மட்டமானது உயரத்தொடங்கியது.
ஆனால் இந்த வருடம் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தே காணப்படுகிறது. இதற்கு காரணம் பொதுமுடக்கம் என கூறப்படுகின்றது.
பொதுமுடக்கம் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதும், வேளாண் சார்ந்த தொழில்கள் நிறுத்தப்பட்டதும் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பாக அமைந்துள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக விவசாய வேலைகள் பெரிய அளவில் நடக்காதது, தொழிற்சாலைகள் மூடப்பட்டது போன்ற காரணங்கள் தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளன.
மேலும் 800க்கும் மேற்பட்ட உரிமம் வாங்காத குடிநீர் ஆலைகள் மூடப்பட்டதும் நிலத்தடி நீர்மட்டத்தை தக்கவைக்க காரணமாக இருந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்த மாவட்டங்களில் பெரம்பலூர், திருவண்ணாமலை, சிவகங்கை ஆகியவை முதல் மூன்று இடத்தில் உள்ளன. தமிழகத்தில் 50%க்கும் அதிகமான விவசாயம் நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே உள்ளது. குறிப்பாக மழை பொய்த்துவிட்டால் டெல்டா மாவட்டங்கள் அதிக அளவில் நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றன.
கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரும் விவசாயத்திற்கு பயன்படுகின்றனர். இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேசிய தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் சண்முகம், பொதுமுடக்கத்தால் நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. 100% மானியம் கொடுத்தால் சொட்டு நீர்ப்பாசனத்தை ஊக்குவிக்க முடியும். தென்மேற்கு பருவமழை, மேட்டூர் அணைதிறப்பு ஆகியவை இந்த வருடம் விவசாயிகளுக்கு மேலும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பின் நிர்வாக இயக்குநர் சத்யகோபால், அரசு பல திட்டங்கள் மூலம் நீர் நிலைகளை மீட்டு எடுத்துள்ளது. கிராம மேம்பாட்டுத்துறை மூலம் உள்ளூர் நீர்நிலைகள் மீட்டெடுக்கப்பட்டன. சொட்டுநீர் பாசனமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகலில் 7.4 கோடி க.மீட்டர் மண் அகற்றப்பட்டு நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. தடுப்பணைகள் கட்டப்பட்ட நீர் தேக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகல் எல்லாம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post