தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்குமாறு மகஜர்.. - Yarl Voice தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்குமாறு மகஜர்.. - Yarl Voice

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்குமாறு மகஜர்..

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு யாழ் அரச அதிபர் ஊடாக இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தை சேர்ந்த பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் ஒன்றுகூடி ஜனாதிபதிக்கான மகஜரை அரச அதிபரிடம் கையளித்தனர்.


குறித்த மகஜரில் நாடு முழுவதும் பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் விண்ணப்பங்கள் கோரப்பட்டு பிரதமரின் அலரிமாளிகையில் ஆனி மற்றும் ஆவணி மாதங்களில் இரண்டு நேர்முகத் தேர்வுகள் இடம் பெற்று புரட்டாதி மாதம் 16ம் திகதி (2019.09.16) அகில இலங்கை ரீதியாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்திற்கு 6547 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளினது பெயர்ப் பட்டியல் நாடு முழுவதிலுமுள்ள மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் நிமித்தம் அனைவரும் தமது மாவட்ட செயலகங்களுக்குச் சென்று வரவு இடாப்பில் கையொப்பம் இட்டு வந்தோம். மாவட்ட செயலகங்களினால் அவரவரது பிரதேச செயலகங்களுக்கு சில நியமனதாரிகள் கடமையை பொறுப்பேற்குமாறு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு நியமனதாரிகள் கையொப்பமிட்டு கடமைகளைப் பொறுப்பேற்றிருந்த நிலையில் 2019.09.18ம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருப்பதனால் 2019.09.23ம் திகதியன்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களினால் தற்காலிகமாக இந் நியமனங்கள் இடைநிறுத்தப்படுவதாக அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் தொலைநகல் ஊடாக சுற்று நிரூபம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 2019.09.18ம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியாகவும் நியமனம் வழங்கப்பட்ட திகதி 2019.09.16ம் திகதி ஆகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த பின்னர் 2019.11.18ம் திகதியன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட எங்களது பணிகளை மீளதொடர்வதற்கு எங்களது மாவட்ட செயலகத்திற்குச் சென்றிருந்தோம். கௌரவ தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரினால் எமது நியமனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக தடை நீக்கப்பட்டு மீண்டும் நியமனதாரிகளை பணிக்கு அமர்த்துமாறு தொலைநகல் ஊடாக சுற்று நிரூபம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த அமைச்சினால் இந்நியமனம் பற்றி ஒரு தகவலும் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. பின்னர் இந் நியமனத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த நியமனத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கடிதம் மூலமும் ஊடக சந்திப்புக்களின் மூலமும் அரசிற்கு வலியுறுத்தியிருந்தார். ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு பதில்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் 6547 பேரின் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. சுமார் எட்டு மாதங்களாக வேலையின்றி எமது வாழ்வாதாரத்தை இழந்து நடுவீதியில் நிற்கின்றோம்.

இன்றைய அசாதாரண சுழ்நிலையில் எம்மில் பலர் பல்வேறு சமூக ரீதியான அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர் முன்னர் செய்த தொழில்களும் இல்லை. இத் தொழிலும் கிடைத்தபாடில்லை. 6547 குடும்பங்களின் வாழ்க்கையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

குறித்த அமைச்சினால் நியமனம் பெற்ற நாங்கள் உங்களது கண்காணிப்பின் கீழ் எமது மாவட்ட செயலகங்களுக்கு சேவைக்காக நியமிக்கப்பட்ட நாம் இன்று வரை சேவையை தொடர முடியாது உள்ளோம். இத்தொழிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எங்களினதும் எங்கள் குடும்பங்களினதும் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் இதனைப் பெற்றுத் தருவதற்கு எமது மாவட்ட செயலக அதிபராகிய நீங்கள் குறித்த அமைச்சுடன் தொடர்புகளை மேற்கொண்டு எமக்கு தகுந்த தீர்வினை பெற்றுத்தரும் வகையில் ஆவண செய்து தருமாறு தாழ்மையுடன் அகில இலங்கை பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் சார்பில் வேண்டி நிற்கின்றோமென்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மகஜரை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண அரச அதிபர் இதனை உரிய முறையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக செயற்திடட உதவியாளர்களிடம் உறுதியளித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post