பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தேர்தல் இலக்கு – அகிலவிராஜ் - Yarl Voice பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தேர்தல் இலக்கு – அகிலவிராஜ் - Yarl Voice

பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தேர்தல் இலக்கு – அகிலவிராஜ்


பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தேர்தல் இலக்கு என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு கட்டங்களாக மீளத்திறப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
வேறு அரசியல் இலாபங்களை மனதிலிருத்திக்கொண்டு, இப்போது பாடசாலைகளைத் திறக்கக்கூடாது என்று நாம் கூறப்போவதில்லை. கடந்த வருடம் ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னர், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விரைவாகப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கே எமது அரசாங்கமும் விரும்பியது.
ஆனால் தற்போது மீண்டும் பாடசாலைகளைத் திறக்கும்போது, அதனைச்சார்ந்த செயற்பாடுகள் அனைத்தும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மேலும் கடந்த காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாகக் கூறியவர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக இப்போது கருத்து வெளியிடுகின்றார்கள்.
அவ்வாறெனின் இதன் பின்னணியில் இருக்கின்ற ஒப்பந்தம் என்னவென்று கேள்வியெழுப்ப விரும்புகின்றோம். இப்போது அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாகத் தெரியவில்லை.
கடந்த காலத்தில் நாங்கள் ஏற்படுத்திய ஜனநாயக இடைவெளி மறைந்து, இப்போது மக்களுடைய மனங்களை ஒருவித அச்சம் ஆக்கிரமித்திருக்கிறது. தற்கொலையோ அல்லது வேறு எவ்வாறாகவோ மரணங்கள் இடம்பெறுகின்றன. இவைகுறித்து மக்கள் குழப்பமடைந்திருக்கிறார்கள். அதேபோன்று தேர்தல் முடிவடைந்ததும் அரசாங்க ஊழியர்களின் ஊதியத்தில் குறைப்புச்செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்மால் இயன்றவரை அதிகளவான ஆசனங்களைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதே எமது எதிர்பார்ப்பாகும்.
அதற்கு நாம் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியமில்லை. வரலாற்றைப் பொறுத்தவரை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி அதன் செல்வாக்கை இழந்தபோதிலும் மீண்டும் அந்நிலையிலிருந்து மீண்டு தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. அதனை அனைவரும் மனதிலிருத்திக்கொள்ள வேண்டும்.
நாம் எதிர்க்கட்சிப் பதவியையோ அல்லது குறித்த கட்சியொன்றையோ கைப்பற்றுவதை நோக்காகக் கொண்டு தேர்தலில் களமிறங்கவில்லை. மாறாக எம்முடைய ஒரே இலக்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசாங்கம் அமைப்பதேயாகும்” என மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post