சமூக ஆர்வலர் பவதாரணி ராஐசிங்கம் இம்முறை தேர்தல் களத்தில்.. - Yarl Voice சமூக ஆர்வலர் பவதாரணி ராஐசிங்கம் இம்முறை தேர்தல் களத்தில்.. - Yarl Voice

சமூக ஆர்வலர் பவதாரணி ராஐசிங்கம் இம்முறை தேர்தல் களத்தில்..

சமூக ஆர்வலராகவும் வெற்றிகரமான தொழிலதிபராகவும் இயங்கி வரும் பவதாரணி ராஜசிங்கம் அவர்கள், தனது சொந்த யாழ் மண்ணில் இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்காக களமிறங்கி உள்ளார். 

ஆளுமைமிக்க பெண்மணியாக பல அங்கீகாரங்களைப் பெற்ற பவதாரணி அவர்கள், தன் ஆரம்பகாலக் கல்வியை யாழ்பாணத்திலும், உயர்கல்வியை கொழும்பிலும் கற்றவராவார். இவரது பெறோர் சிறுவயதில் அளித்த ஊக்கத்தையும், இவர் பெற்ற கல்வித்தகுதியையும், தன் குடும்பத்தினரின் ஆதரவினையும், வாழ்க்கைபயணத்தின் அனுபவங்களையும் கொண்டு இவர், தான் கண்ட கனவுகளை நனவாக்கும் சாதனைப்பெண்ணாக வெற்றிகரமான தொழில் தருனராக இன்று உயர்ந்திருக்கிறார்..

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயை சொந்த இடமாகக்கொண்டவர் பவதாரணி ராஜசிங்கம். திரு.மகேந்திரன் மற்றும்  திருமதி. அரசராணி மகேந்திரனின் புதல்வியாக  மிகவும் அன்பான மகளாக, திறமையான மாணவியாக, சமூகத்தின் மீது அக்கறையுள்ள நற்பிரஜையாக ஆரம்பத்திலிருந்தே வளர்ந்துவந்துள்ளார்.யாழ் இந்து மகளிர் கல்லூரி, யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம், கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரி, கொழும்பு திருக்குடும்ப கன்னியர் மடம் ஆகிய பாடசாலைகளில் இவருக்கு அடித்தளம் இடப்பட்டது.

இவரது கணவரும் சிறந்த தகுதி வாய்ந்ததொரு முதன்மை நிறைவேற்று அதிகாரியாக (CEO) நிறுவனமொன்றை நிர்வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவரது மாமனார் 1976 ஆம் ஆண்டு தமிழில் இங்கு வெளியான "பொன்மணி" என்ற திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஒரு மகனும், 6 வயது நிரம்பிய மகளுமாக பூரணமான குடும்பத்தை காக்கும் அழகான குடும்பத்தலைவியாகவும் விளங்கிவருகிறார் பவதாரணி ராஜசிங்கம்.

வர்த்தகத்துறைப் பட்டதாரியாக , CIMA  சான்றிதழ் பெற்றவராக அவர் கற்ற கல்வியின் பலனை சரிவர பயன்படுத்தி சாதித்த  ஒருவராக திகழ்கிறார் பவதாரணி ராஜசிங்கம்..

1993 இல் CIMA தகுதியுடன் உதவிக் கணக்காளராக தன் தொழில் உலகத்தில் காலடியெடுத்து வைத்த இவர் 1995 இல் முகாமைத்துவ கணக்காளராக,1997 இல் செயற்திட்ட அதிகாரியாக ,நிதிக் கட்டுப்பாட்டாளராக படிப்படியாக முன்னேறினார்.

2003 இல் தன் சொந்த தயாரிப்புக்களுடன் வர்த்தகத்துறையில் காலடி எடுத்து வைத்தார். 2005 இல் றீல் எஸ்டேட் துறையில் கால் பதித்தார். 2007 இல் கட்டட நிர்மாணத்துறையில் தடம்பதித்து வெற்றிகரமான வணிக இயக்குனரானார்.இவ்வாறு வர்த்தகத்துறையில் சாதிக்கத் தொடங்கிய இவர் 2010 இல் Decer Holings (pvt) ltd எனும் சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்.

அதன் பின்னர், உணவுத்தயாரிப்புக்களில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட இவர் தரமான உள்ளூர் உணவு உற்பத்திகளை அடிப்படையாக கொண்ட நிறுவனமாக Arokya International (pvt) ltd எனும் நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி கண்டார். 23 வருட வியாபாரத்துறை அனுபவங்களைக் கொண்ட சிறந்த பெண் தொழிலதிபராகவும் கூட்டு நிறுவனங்களின் (Group of companies)  நிர்வாக அதிபராகவும் வெற்றிகரமாக செயற்பட்டு வருகிறார்.

வியாபாரத்துறை வெற்றியாளராக மாத்திரமன்றி, சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கும் இவர் Leo Club , Lions Club, ARROWS, LEADS போன்ற அமைப்புக்களிலும தன்னை இணைத்துக்கொண்டு, சமூகம் சார்ந்தும் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செயற்பட்டு வருகிறார். உளவளத்துறை, கல்விவழங்கல் சார்ந்த நிறுவனங்களுடனும் ஆர்வத்தோடு தன்னை ஈடுபடுத்தி பணியாளராகவும் பங்காளராகவும் செயற்பட்டு வருகிறார்.

ஆரம்பக்கல்வித்துறை சார்ந்து இயங்கும் ‘ Akura’ என்ற செயற்திட்டத்தை உருவாக்கி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்,குழந்தைகள்,பெற்றோர் போன்ற சமூகத்தையும் தன்னுடன் இணைத்து செயற்பட்டு வருகிறார்.

மக்கள் உரிமைகள் சார்ந்து செயற்படத்தக்க ‘SOLVE’ எனப்படும் செயலி ஒன்றை உருவாக்கும் நவீனமயப்படுத்தப்பட்ட திட்டமொன்றையும் ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்க மற்றுமோர் சாதனையாகும்.

கலைத்துறையிலும் இவரது பங்களிப்பு கவனிக்கப்பட வேண்டிய குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும். 40 வருட கால இலங்கைத் தமிழ் சினிமா இடைவெளியை புதிய அலை கொண்டு நிரப்பிய ‘கோமாளி கிங்ஸ்’ என்ற மாபெரும் திரைப்படத்தின் தயாரிப்பாளராக தன் கலைத்தாகத்திற்கும் ஆவன செய்தார். இத்திரைப்படமானது இலங்கையின் சினிமாத்துறையில் ஒரு மைற்கல்லாக, வரலாறாக அமைந்ததுடன் 2019 இல் பல்வேறு விருதுகளையும் தனதாக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சினிமாக்களை உலகம் முழுவதற்கும் அறிமுகம் செய்துவைக்க cynema.com என்றொரு தளத்தையும் இவர் நிறுவியமை சமூகத்தை தரமுயர்த்துவதில் இவர் கொண்டுள்ள ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும்.

சமூகத்தின் பார்வைக்கு மாண்புறு மங்கையாக பரிணமிக்கும் பவதாரணி ராஜசிங்கம், தனது ஆரம்ப காலம் முதலே தான் பிறந்த மண்ணில் தான் காணும் அவலங்களையும், தன் சொந்த மக்கள் பிரச்சினைகளையும் கலைந்து தன்னிறைவான சமூகம் ஒன்றை உருவாக்கும் கனவை தனக்குள் சுமந்து வந்திருக்கிறார். அக்கனவு இப்போது, அவரது அரசியல் பிரவேசம் மூலமாக புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. 

சமூக விடயங்களில் இதுவரை தனியொரு பிரஜையாக தன்னால் இயன்றவரைக்கும் செயற்பட்டதைப் போல, இனிவரும் காலங்களில் யாழ் மற்றும் கிளிநொச்சி மக்களின்  அனுமதியுடன், அவர்கள் தேர்ந்தெடுக்கும் சரியான முடிவுகளுடன் பாராளுமன்ற உறுப்பினராக கடமையேற்று அரசியல் சட்டதிட்டத்திற்கு அமைய தேசிய அளவிலான வளங்களைக்கொண்டு முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வளம்மிக்க சமுதாயத்தையும் தன்னிறைவான வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதே கண்களைத்திறந்துகொண்டு அவர் காணும் கனவாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post