இளைஞர் யுவதிகளை தமிழ்த் தேசியப் பாதையிலிருந்து திசைதிருப்ப சதி முயற்சி - ஆனல்ட் ஆதங்கம் - Yarl Voice இளைஞர் யுவதிகளை தமிழ்த் தேசியப் பாதையிலிருந்து திசைதிருப்ப சதி முயற்சி - ஆனல்ட் ஆதங்கம் - Yarl Voice

இளைஞர் யுவதிகளை தமிழ்த் தேசியப் பாதையிலிருந்து திசைதிருப்ப சதி முயற்சி - ஆனல்ட் ஆதங்கம்


எமது இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் குறித்து நாம் அவசியம் சிந்திக்க வேண்டும். இல்லையேல் அரச தொழில் வாய்ப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி தமிழ்த் தேசியப் பாதையில் உள்ள வாக்குகளை சிங்கள கட்சிகளின் முகவர்கள் இலகுவாக தட்டிச் செல்ல பார்க்கின்றார்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் வட்டுக்கோட்டையில் சாந்தைப்பகுதியில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கருத்து வெளியிட்டிருந்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது.

தற்போதைய இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் அவர்களின் வாழ்வியல் முன்னேற்றம் என்பன குறித்து நாம் அவசியம் சிந்திக்க வேண்டியுள்ளது. அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டிய கடமை எம்மீதும் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் அரசின் சார்பில் போட்டியிடும் சிங்களக் கட்சிகள் மற்றும் அரசுடன் இணைந்து அங்கம் வகித்து செயற்படும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசியப் பாதையில் தூய்மையான பயணத்தில் இதுவரை பயணித்துவரும் இளைய தலைமுறையினரை தவறான பாதையில் திசைதிருப்ப பல்வேறு வழிகளிலும் முயற்சித்து வருகின்றனர். 

அதன் ஒரு வழிமுறையே தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர் யுவதிகளை தாம் வென்றால் அரச வேலைவாய்பை பெற்றுத் தருவோம், தொழில் முயற்சிகளுக்கு உதவி செய்வோம் என்று ஒரு மாயையை காண்பித்து தம் பக்கம் இழுத்துக் கொள்ளும் முயற்சியை ஆரம்பித்திருக்கின்றனர். இது முதலில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழ்த் தேசியப் பாதையில் இருந்து இளையர்களை திசை திருப்ப முடியாது என்பதையும், சலுகைகள் மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்காகவும் நாம் எமது இத் தீர்வு முயற்சியுடன் கூடிய தமிழ்த் தேசிய விடியலை நோக்கிய பயணத்திலிருந்து விலக மாட்டோம் என்;பதை இளம் தலைமுறையினர் தமது வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு புள்ளடியிட்டு நிரூபிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. நிச்சயம் அது நடக்கும்.

இளைஞர் யுவதிகள் குறித்து நாம் அக்கறை இல்லாமல் இருக்கின்றோம் என்று எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விரல் சுட்ட முடியாது. மாகாணசபையை பொறுப்பேற்றவுடன் பல்வேறு நியமனங்கள் வழங்கப்பட்டிக்கின்றது. பட்டதாரி ஆசிரியர் நியமனம், மாகாண அமைச்சுக்கள் - திணைக்களங்களில் இருந்த வெற்றிடங்கள், முகாமைத்துவ உதவியாளர் நியமணம், அலுவலக உதவியாளர் நியமனம் மற்றும் நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவந்த தொண்டர் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட ஏராளமான நியமனங்களை வழங்கியிருக்கின்றோம். அரச நியமனங்கள் பொதுவாக அரச சட்ட முறைமைக்கு அமைய அதற்கான கல்வித் தகுதி மற்றும் போட்டி பரீட்சைகள் மூலமாகவே வழங்கப்படுகின்றது. எனவே தொழில் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இளையவர்கள் தமது கல்வித் தகைமைகள் மற்றும் போட்டிப் பரீட்சைகள் என்பவற்றை எதிர்கொள்ளக் கூடிய வகையில் தம்மை தயார்செய்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களைப் போன்று எவ்வித அரசியல் நியமனங்களும் வழங்கப்படுவதில்லை. அரசியல் ரீதியான நியமனங்களை நாம் ஒரு போதும் ஊக்குவிப்பது கிடையாது. அது இளையவர்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், தொழில் நிரந்தரத்தன்மையினையும் கேள்விக்குற்படுத்தும்.

எனவே முறையான அரச நியமங்களுக்கு ஊடாக எமது மாகாண இளைஞர்களுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய அனைத்து அரச தொழில் வாய்ப்புக்களையும் முன்னர் பெற்றுக் கொடுத்தது போன்று தொடர்ந்தும் முயற்சிப்போம். மாகாண நியமனங்கள் மட்டுமன்றி எம்மாலான பல்வேறு முயற்சிகளை கடந்த காலங்களில் நல்லாட்சி; அரசின் ஊடாகவும் முன்னெடுத்திருந்தோம். அவை நடைமுறைக்கு வருகின்ற பொழுது நாட்டில் அவ்வப்போது ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் தேர்தல்களினால் அவை அமுல்படுத்தப்படாமலிருப்பதை காண முடிகின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னர் முதல் ஏற்பாடாக வழங்கப்பட்ட பயிற்சித்திட்ட உதவியாளர்களுக்கான நியமனத்;தை நடைமுறைப்படுத்த எம்மாலான அழுத்தங்களை கூட்டமைப்பு வழங்கும். இளைஞர்களின் தொழில் மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்தில் கூட்டமைப்பு ஏராளமான விடயங்களை செய்திருக்கின்றது. இதனை யாரும் மறுக்கவோ மறந்துவிடவோ முடியாது.

மேலும் பட்டப்படிப்புக்களை நிறைவு செய்த எமது இளைஞர் யுவதிகள் அரச தொழிலை மாத்திரம் நம்பிக் காலத்தை கழிக்காமல் தனியார் துறை மீதும் கவனம் செலுத்த வேண்டும். தொழில் நிரந்தரத் தன்மைக்காக மாத்திரம் அரச துறையை எதிர்பார்த்து அதனை விட அதிகம் வருவாயைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஏராளமான தனியார் துறைகளும் தொழில் முயற்சிகளும் காணப்படுகின்றது. நான் ஒரு பட்டதாரி. ஆயினும் நான் அரச தொழில் ஒன்றை எப்பொழுதும் எதிர்பார்த்ததில்லை. அரச துறையை விட தனியார் துறையில் சிறந்த முறையில் பணியாற்றிவருகின்றோம். இவ்வாறு தனியார் துறையை நோக்கியும் செல்வது குறித்து இளம் தலைமுறை சிந்திக்க வேண்டும். அங்கு பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இவை பட்டதாரிகளுக்கு மட்டுமன்றி உயர்தரக் கல்வித் தகைமை கொண்டோர்களுக்கும் வாய்ப்பாகும்.

நிச்சயம் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் முன்னர் இயங்கிய தொழிற்சாலைகள், தொழில் நிலையங்கள் என்பவற்றை மீள உருவாக்குவதற்கும் அதன் மூலம் இளையோர்களுக்கான தொழில் வாய்;ப்புக்களை அதிகரிப்பதற்கும் முயற்சிக்கும். அதற்கான பாரிய திட்டமிடல்களை மேற்கொள்வோம். இளைஞர்களோடு இணைந்து கலந்துரையாடி இவ் முயற்சிகளை தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் தீர்மானங்களாகக் கொண்டு வந்து நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம். ஒரு பேர்தும் எமது இளம் தலைமுறையினரை நாம் கைவிடமாட்டோம். என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post