காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்காக தமிழராக ஒன்றுபடுவோம் - ஐங்கரநேசன் - Yarl Voice காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்காக தமிழராக ஒன்றுபடுவோம் - ஐங்கரநேசன் - Yarl Voice

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்காக தமிழராக ஒன்றுபடுவோம் - ஐங்கரநேசன்


தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி நீண்டகாலமாக முன்னெடுத்துவரும் போராட்டத்தின் தொடர்ச்சியாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி வடக்கிலும், கிழக்கிலும் போராட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளனர். 

அவர்களின் வலிகளில் பங்கேற்கும் விதமாகவும், அவர்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாகவும், அசுரப்பலம் பெற்று எம்மை அடக்கிடத் துடிக்கும் பேரினவாத அரசுக்கு 'நாம் யார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்' என்று உரத்துச் சொல்லும் விதமாகவும் நீதிகோரிய இந்நெடும் பயணத்தில் கட்சி வேறுபாடுகளைக் களைந்து தமிழராக நாம் ஒன்றுபட்டு அணிதிரள்வோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் நாளை ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
மேலும் அந்த அறிக்கையில், 

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பயமுறுத்தி நசுக்குகின்ற ஒரு செயற்பாடாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அல்லது போராட்டத்துடன் தொடர்புபட்டவர்கள் எனச் சந்தேகிப்பவர்களைக் கடத்திக் காணாமற் போகச்செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளன. 

அதன் உச்சமாக, வன்னிப்போரின் போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் உறவுகளால் படையினரிடம் கையளிக்கப்பட்ட ஏராளமானவர்களையும் அரச படைகள் காணாமற்போகச் செய்து விட்டிருக்கின்றன. பலர் பார்த்திருக்க இந்தக் கையளிப்பு நிகழ்ந்த போதிலும், கையளித்த உறவினர்கள் இன்னமும் நடைப்பிணமாக உலாவுகின்றபோதும் அவ்வாறு எதுவுமே நிகழாததுபோல காணாமற் போனோர் என்று எவருமே இலர் என்று அரசாங்கம் எகத்தாளமாகப் பொய்யுரைத்து வருகிறது. 

யுத்தம் முடிந்து ஒரு தசாப்தத்தைக் கடந்து விட்டபோதும் காணாமற் போன தங்கள் உறவுகளைத் தேடி அவர்களது உறவுகள் கண்ணீரும் கம்பலையுமாக வீதிகளில் இன்றும் அலைந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான நீதியைப் பெறுவதையும் உள்ளடக்கி ஐக்கிய நாடுகள் சபையின் நிலைமாறு கால நீதியைத் தாபிப்பதற்கான 30ஃ1 தீர்மானத்தைக் கடந்த நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டிருந்தது. 

ஆனால், காணாற் போனோர் பற்றிய அலுவலகம் ஒன்றைத் திறந்து சம்பிரதாயப்பூர்வமாகப் பதிவுகளை மேற்கொண்டதோடு இந்த அலுவலகமும் உறக்கத்தில் ஆழந்து கிடக்கின்றது. புதிதாக ஆட்சி பீடமேறிய அரசாங்கமோ இந்தத் தீர்மானத்திற்குக் கடந்த அரசாங்கம் வழங்கிய அனுசரணையில் இருந்து தாம் விலகப்போவதாக அறிவித்திருக்கின்றது. 

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின்படி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் அவர்களின் சமூகமும் அதுபற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்குரிய உரித்துகள் உடையவர்களாவார்கள். உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பதால் மனோரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தபோதும் இடைவிடாது கடந்த பல வருடங்களாக நீதிகோரி இவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். 

இலங்கை அரசாங்கம் இந்த அபலைகளின் குரலை செவிமடுக்காத நிலையில் இவர்களுக்கான நீதியை விரைந்து பெற்றுத்தர சர்வதேச சமூகமே ஆவன செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் 30.08.2020 (ஞாயிறு) அன்று காலை 10.00 மணிக்கு வடக்கில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி யாழ். மாவட்டச் செயலகத்தை நோக்கி நகரும் பேரணியிலும், கிழக்கில் மட்டக்களப்பு கல்லடிப் பூங்காவில் ஆரம்பமாகி காந்தி பூங்காவை நோக்கி நகரும் பேரணியிலும் பல்லாயிரக்கணக்கில் நாம் பங்கேற்று இப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

0/Post a Comment/Comments

Previous Post Next Post